தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகம்.. பிப்.24ல் தொடங்கி வைக்கும் மு.க.ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்.24ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். சென்னையில் மட்டும் 33 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ள நிலையில், இதுவரை 840 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில், மற்ற விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சுதந்திர தினம் விழாவின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் ஜெனரக் மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து முதல்வர் மருந்தகம் அமைக்க பி.பார்ம் அல்லது டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலமாக www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

விதிமுறைகள் என்ன?
இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதுவரை முதல்வர் மருந்தகம் அமைக்க மொத்தமாக 840 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும்.
ஒருவேளை சொந்த இடமாக இருந்தாலும், அதற்கான சான்றிதழ் மற்றும் சொத்து வரி ரசீது அல்லது மின் இணைப்பு ரசீது உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும். வாடகை இடமாக இருந்தால், உரிமையாளர்களிடம் வாடகை ஒப்பந்தப் பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
பிப்.24ல் திறப்பு
கடந்த சில வாரங்களாகவே முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் செய்தி வெளியிடப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிப்.24ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 33 இடங்களில் முதல்வர் மருந்தகம் அமைக்கப்படவுள்ளது.
அரசு மானியம்
அதேபோல் இதுவரை 2 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியமாக ரூ.3 லட்சம் இரு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் அமைக்கப்படும். அவர்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன்பெற வழிவகை செய்து கொடுக்கப்படும்.
கடன்பெறவும் வசதி
அதுமட்டுமல்லாமல் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளித்த பின் மானியத் தொகை ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்படும். இதன்பின் ரூ.1.50 லட்சத்திற்கு மருந்துகள் அளிக்கப்படும். அதேபோல் விற்பனைக்கு ஏற்றவாறு ஊக்கத்தொகை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தகங்கள் மூலமாக மக்கள் மருந்துகளை குறைந்த விலையில் வாங்கலாம்.












Click it and Unblock the Notifications