சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதையும் நம்பாதீங்க.. ஏன்.. எதுக்குனு கேளுங்க - இளைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்!

Google Oneindia Tamil News

சென்னை : புத்தக கண்காட்சிகளுக்காக இந்த ஆண்டு, 4 கோடியே 96 லட்சம் ரூபாய் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழின் பெருமையை, சிறப்பை உணருவதற்கு புத்தகத் திருவிழாக்கள்தான் அடித்தளமாக அமைகின்றன எனத் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்று காரணமாக ஈரோடு புத்தக திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு புத்தக திருவிழா ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நடக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது வீட்டில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஈரோடு, சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

காவி ட்ரெஸ்.. ஜிம்மில் கடும் ஒர்க்அவுட்.. பின்னணியில் 'பாராட்டு செய்தி’- அசத்தும் முதல்வர் ஸ்டாலின்! காவி ட்ரெஸ்.. ஜிம்மில் கடும் ஒர்க்அவுட்.. பின்னணியில் 'பாராட்டு செய்தி’- அசத்தும் முதல்வர் ஸ்டாலின்!

தொடங்கி வைத்த முதல்வர்

தொடங்கி வைத்த முதல்வர்

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "18வது ஈரோடு புத்தகத் திருவிழாவை காணொலி வாயிலாகத் தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வெளியூர் பயணங்களைச் சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால், நேரடியாக வந்து கலந்துகொள்ள இயலாதவனாக இருக்கிறேன். இதனை தாங்கள் அனைவரும் பெருந்தன்மையோடு பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று முதலில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். ஈரோட்டுக்கு வருவதில் மிக மிக மகிழ்ச்சி அடைபவன் நான் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதல்ல! ஈரோடு - எங்கள் உயிரோடு கலந்த ஊர். நம் உணர்வோடு கலந்த ஊர். நமக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்டிய ஊர். பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் - ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார் - என்று எழுதினார் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். அத்தகைய புகழ் பெற்ற தந்தை பெரியார் அவர்கள் பிறந்த ஊர். பேரறிஞர் அண்ணா அவர்கள் வாழ்ந்த ஊர். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் குடியிருந்த ஊர்.

பெரியார் ஊரில்

பெரியார் ஊரில்

திராவிட இயக்கம் இன்று இத்தனை பேரும் புகழும் பெற்ற இயக்கமாக இருக்கிறது என்றால், நம்முடைய தமிழினம் இத்தகைய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் நிச்சயமாக இந்த ஈரோடு ஆகத்தான் இருந்திட முடியும். அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த ஊரில் - அறிவுத் திருவிழாவான புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அதிலும் என்னை அழைத்திருப்பவர் சாதாரண குணசேகரன் அல்ல, ஸ்டாலின் குணசேகரன் என்பதால் எனக்கு தனிப்பட்ட முறையில் பாசம் உண்டு. நாங்கள் இருவரும் ஒரே பெயர்களைக் கொண்டவர்கள் மட்டுமல்ல - ஒரே கொள்கை கோட்பாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் என்னுடைய கொள்கைச் சகோதரர் அழைப்பை ஏற்று இக்கண்காட்சியைத் மகிழ்ச்சியோடு நான் திறந்து வைக்கிறேன்.

ஸ்டாலின் குணசேகரன்

ஸ்டாலின் குணசேகரன்

இந்திய விடுதலை வேள்வியில் தமிழ்நாட்டு வீரர்கள் ஆற்றிய பங்களிப்பைத் தொகுத்து, 'விடுதலை வேள்வியில் தமிழகம்' என்ற நூலை ஸ்டாலின் குணசேகரன் 1999-ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்த வரலாற்றுப் புதையலான நூலுக்கு அன்றைய முதலமைச்சர் நம்முடைய கருணாநிதி அணிந்துரை வழங்கினார். "நாட்டுப் பற்றில் தமிழக வீரர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் எவருக்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வழிகாட்டுகிறது இந்த நூல். எழுத்தாளர் பெருமக்கள் பலர் நெய்த நூல் கொண்டு அரியதோர் ஆடையாக இதனை உருவாக்கியுள்ள அன்பர் ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு என் பாராட்டுகள்" - என்று தலைவர் கருணாநிதி குறிப்பிட்டு இருந்தார். தமிழாகவே வாழ்ந்த தலைவர் கலைஞர் அவர்களிடம் பாராட்டைப் பெறுவது என்பது எளிதல்ல. அவரிடமே பாராட்டைப் பெறும் அளவுக்கு வரலாற்று நூலை உருவாக்கிக் கொடுத்தவர் ஸ்டாலின் குணசேகரன்.

 தமிழர்களின் ஆட்சி

தமிழர்களின் ஆட்சி

தன்னைப் போன்ற எழுத்தாளர்களை, பேச்சாளர்களை, அறிஞர்களை, தமிழ்ப்புலவர்களை, படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் ஈரோட்டில் புத்தகத் திருவிழாவை நடத்தத் தொடங்கி பதினெட்டு ஆண்டுகளாக தொய்வில்லாமல் நடத்தி வருகிறார் என்றால், அவரது அயராத தமிழ் ஆர்வத்தை அனைவரும் பாராட்ட வேண்டும். இதுபோன்ற ஆர்வலர்கள் தமிழ்நாடு முழுவதும் உருவாக வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் ஸ்டாலின் குணசேகரன்கள் உருவாக வேண்டும்! புத்தக வெளியீட்டு விழாக்களில் கலந்துகொள்வதும், புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பதும் மகிழ்ச்சிக்குரியது. ஏனென்றால் இவை அறிவுத்திருவிழா! தமிழ்த் திருவிழா! தமிழாட்சி - தமிழர்களின் ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது தமிழ்நாட்டில். இத்தகைய தமிழாட்சி நடக்கும் நாட்டில் தமிழ்த் திருவிழாக்களும் அதிகம் நடந்தாக வேண்டும்.

 புத்தகக் காட்சி

புத்தகக் காட்சி

சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றேன். சென்னையைத் தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் தான் இதுபோன்ற கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியோடு இத்தகைய புத்தகக் கண்காட்சி நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். அதற்காக இந்த ஆண்டு, 4 கோடியே 96 இலட்சம் ரூபாய் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்த முதலில் ஜனவரி மாதம் தேதி குறிக்கப்பட்டது. கொரோனா பரவிய காரணத்தால் தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே அரங்கம் அமைத்து விட்ட காரணத்தால் பதிப்பாளர்களுக்கு இழப்பும் ஏற்பட்டது. இதனை முன் வைத்து பதிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். உடனடியாக 50 லட்சம் ரூபாயை இழப்பீடு தொகையாக வழங்கிய ஆட்சிதான் திமுக ஆட்சி! வழக்கமாக, சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் 75 லட்சத்துடன் இந்த ஐம்பது லட்சத்தையும் சேர்த்து ஒன்றே கால் கோடி ரூபாயை வழங்கினோம். இதைத் தொடர்ந்து, பதிப்பாளர்களின் நெடுநாள் கோரிக்கையான நிரந்த புத்தகப் பூங்கா அமைப்பதற்கான ஒப்புதலையும் தமிழக அரசு வழங்கி இருக்கிறது.

திட்டங்கள்

திட்டங்கள்

2007-ஆம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்த அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, சென்னையில் மிகப் பிரமாண்டமான நூலகம் அமையப் போகிறது என்ற அறிவிப்பினை வெளியிட்டார். அதுதான், இந்தத் தமிழ்ச்சமுதாயம் அரசியல் விழிப்புணர்வு பெற்ற சமுதாயமாக உயர பாடுபட்ட பேரறிஞர் அண்ணாவின் பெயரால் சென்னையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம்! அதே போல் மதுரையில் கருணாநிதி பெயரால் 114 கோடி மதிப்பீட்டில் மாபெரும் நூலகம் அமைக்க இன்றைய அரசு திட்டமிட்டு, இடத்தைத் தேர்வு செய்துள்ளது. மிகப் பிரமாண்டமாக மதுரையில் விரைவில் எழ இருக்கிறது. தமிழ் நூல்கள் நாட்டுடமை, எழுத்தாளர்கள் பிறந்தநாளில் கூட்டங்கள், குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு, திராவிடக் களஞ்சியம் உருவாக்கம், இதழியலாளர்க்கு கலைஞர் எழுதுகோல் விருது, உலகப் பல்கலைக் கழகங்களில் செம்மொழித் தமிழ் இருக்கைகள், நூலகங்களுக்கு சிற்றிதழ்கள், இலக்கியமாமணி விருதுகள், உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம், திசை தோறும் திராவிடம், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் - என ஏராளமான தமிழ்க் காப்புத் திட்டங்களை இன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்தி வருகிறது. பதிப்பகங்களோடு போட்டி போடக்கூடிய அளவுக்கு தமிழ்நாடு அரசும் ஏராளமான நூல்களை வெளியிட்டு வருகிறது என்பதை நான் கம்பீரமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

 தொடர்கிறது பணி

தொடர்கிறது பணி

1960-70-ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட 875 நூல்களில் 635 நூல்களை இந்த ஓராண்டு காலத்தில் மறுபதிப்பாக கொண்டு வந்துள்ளோம். தமிழின் மிகச் சிறந்த படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி உள்ளது. இத்தகைய மொழிபெயர்ப்பு பணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. பேரறிஞர் அண்ணா குறித்த 'மாபெரும் தமிழ் கனவு' ஆங்கிலத்திலும் - வைக்கம் போராட்டம் மலையாளத்திலும் - கலைஞரின் திருக்குறள் அதனுடைய உரை தெலுங்கிலும் - தி.ஜானகிராமன் சிறுகதைகள் கன்னடத்திலும் வரப் போகின்றன. கால்டுவெல்லின் 'திராவிட அல்லது தென்னிந்திய குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்' நூலை மொழி அறிஞர் பா.ரா.சுப்பிரமணியம் அவர்கள் மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார். அதனை அரசு வெளியிட்டுள்ளது. சங்க இலக்கிய நூல்களை செம்பதிப்பாக கொண்டு வர இருக்கிறோம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. பிறமொழியில் இருந்து தமிழுக்கும் பல்வேறு நூல்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன. குழந்தை இலக்கிய நூல்கள் - 100 வெளியிட இருக்கிறோம். அதில் 27 இதுவரை வெளியாகி உள்ளது.

 வேறு யாருக்கும் இல்லாத பெருமை

வேறு யாருக்கும் இல்லாத பெருமை

இலக்கியத்தையும், படைப்புலக அறிவையும் அனைவருக்கும் புகுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அறியலாம். உலகில் எந்த மொழிக்கும் இல்லாத பழமைச் சிறப்பும், இலக்கிய இலக்கண வளமையும் தமிழ் மொழிக்கு உண்டு. இந்த தமிழ்மொழிதான் தமிழ் இனத்தைக் காக்கும் காப்பரணாக அமைந்திருக்கிறது. எத்தகைய படையெடுப்புகள் வந்தாலும் அத்தனை படையெடுப்புகளையும் தாங்கி நிற்கும் வல்லமை நம்முடைய தமிழ்மொழிக்கு உண்டு. எத்தனை படையெடுப்புகள் வந்தாலும் தமிழ் மொழியானது தன்னையும் காத்தது, தமிழினத்தையும் காத்தது, தமிழ்நாட்டையும் காத்தது. 'வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்று தலைவர் கலைஞர் சொன்னதைப் போல உயிரைக் கொடுத்து மொழியைக் காத்த தியாக மறவர்கள் வாழ்ந்த நாடு இந்த தமிழ்நாடு. தமிழைக் காக்க சிறையில் இருந்து நடராசனும் தாளமுத்துவும் மரணம் அடைந்தார்கள். சின்னச்சாமியும் அரங்கநாதனும் தீக்குளித்தார்கள். மாணவன் சிதம்பரம் ராசேந்திரன் துப்பாக்கிக்குண்டுக்கு மார்பை காட்டினான். லட்சக்கணக்கான தமிழர்கள் 'அஞ்சா நெஞ்சர்' பட்டுக்கோட்டை அழகிரிசாமி தலைமையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு தமிழ்ப்படையாக நடந்து போனார்கள். இவை எல்லாம் வேறு எந்த மொழியிலும், இனத்திலும் நாட்டிலும் பார்க்க முடியாது. ஆண்களும், பெண்களும் தங்கள் மொழிப் பெயரை தங்களுக்கு வைத்துக் கொள்வது இங்குதான்.

புத்தகங்களைத் தாருங்கள்

புத்தகங்களைத் தாருங்கள்

அதனால்தான் என்னைச் சந்திக்க வருபவர்கள் மாலைகள், சால்வைகள், போர்வைகள் அணிவிக்க வேண்டாம், புத்தகங்களைத் தாருங்கள் என்று நான் கேட்டுக் கொண்டேன். புத்தகம் வழங்குவது இன்றைக்கு ஒரு இயக்கமாகவே தமிழ்நாட்டில் மாறி இருக்கிறது. இந்த இயக்கம் விரிவடைய வேண்டும், வலுவடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அறியாமை எனும் இருட்டில் தத்தளிப்பவர்களுக்கு ஒளி கொடுக்கும் அறிவுச்சுடர்தான் புத்தகங்கள்! பொய்யும் புரட்டும் கலந்த பழமைவாதம் எனும் கடலில் சிக்கித் தவிக்காமல், நாம் கரை சேர உதவுகிற பகுத்தறிவுக் கப்பல்கள்தான் புத்தகங்கள்! 'வீட்டுக்கு ஒரு நூலகம் அமைய வேண்டும்' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் விரும்பினார்கள். அப்படி அனைவரும் தங்கள் வீட்டில் சிறு நூலகமாகவாவது அமைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக்கொள்ளும் பண்பாடு வளர வேண்டும்! வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அறிவார்ந்த நூல்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்! சிந்தனையில் தெளிவு ஏற்படும் புத்தகங்களை வாசிக்கத் தூண்டுங்கள்!

கேள்வி கேளுங்கள்!

கேள்வி கேளுங்கள்!

இளைஞர்களே... நிறைய படியுங்கள்! ஏன்... எதற்கு... எப்படி? என்று கேளுங்கள்! ஒரு செய்தி உங்களை வந்தடைகிறது என்றால், அதனை உடனே முழுமையாக நம்பிவிடாதீர்கள்! அதன் உண்மைத்தன்மையை ஆராயுங்கள்! எது உண்மை என்று அறிய வேண்டும் என்றால் நிறைய படிக்க வேண்டும்! இட்டுக்கட்டிக் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுபவர்கள் - அந்தக் கலையில் தேர்ந்தவர்கள்! ஆண்டாண்டு காலமாக கட்டுக்கதைகளை நம்ப வைக்கும் திறனைப் பெற்றவர்கள்!
ஆனால், தமிழ்ச்சமூகம் பகுத்தறிவுச் சமூகம்! பொய்களையும் - கட்டுக்கதைகளையும் வென்ற சமூகம்! தமிழகம் அறிவுப் புரட்சி மாநிலமாக - பகுத்தறிவுப் புரட்சி மாநிலமாக மாறுவதற்கு இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் அனைத்து நகரங்களிலும் நடைபெற வேண்டும். அறிவே அனைத்துக்கும் அரண். புத்தகங்களே புத்துணர்வு அமுதம்.
எல்லாவற்றுக்கும் ஈரோடு வழிகாட்டியது போல புத்தகத் திருவிழாவுக்கும் வழிகாட்டுகிறது ஈரோடு!" என உரையாற்றினார்.

English summary
Tamil Nadu Chief Minister M.K.Stalin inaugurated Erode Book Festival through video conference. He said that such book festivals should be held in all cities to make Tamil Nadu a knowledge revolution state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X