ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம் தொடர் வெற்றி அமையட்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்.5ஆம் தேதி நடக்கவுள்ளது. அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. திமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ விசி சந்திரகுமாரும், நாதக சார்பாக சீதாலட்சுமியும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இரு தரப்பிலும் தீவிரமாக வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. அதிலும் நாம் தமிழர் கட்சியின் சீமான் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பொதுக் கூட்டங்களில் ஆவேசமாக பேசி வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் என்பது எதிர்பாராத வகையிலும் மனதில் பெரும் சுமையுடனும் எதிர்கொள்ள வேண்டிய களமாக அமைந்துவிட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்றவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈவெரா திருமகன். அவருடைய அகால மரணத்தைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களம் கண்டு மாபெரும் வெற்றி பெற்றார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் அதிர்ச்சி தரத்தக்க மரணத்தால் இந்த இடைத்தேர்தல் களத்தைச் சந்திக்கின்றோம். இந்த முறை ஈரோடு கிழக்கில் திமுக போட்டியிட வேண்டும் என்று கழகத்தினர் விரும்பியது மட்டுமின்றி, அரசியல் சூழலை நன்குணர்ந்த தோழமைக் கட்சியான காங்கிரஸ் பேரியக்கமும் தீர்மானித்து அறிவித்ததைத் தொடர்ந்து, திமுகவின் வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் களமிறங்கியுள்ளார்.
திமுக அரசின் மீது தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதான், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் கழக வேட்பாளருக்கு வழங்கும் மகத்தான ஆதரவு. இந்த அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையும் ஆதரவையும் எப்படியாவது சிதைக்க வேண்டும் என்று நாளொரு அவதூறையும் பொழுதொரு பொய்யையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பினாலும் அவை மக்கள் மன்றத்தில் எடுபடுவதில்லை. பொழுது சாய்வதற்குள் எதிர்க்கட்சிகளின் பொய்களும் அவதூறுகளும் பொடிப் பொடியாகிவிடுகின்றன.
திமுக வேட்பாளரை எதிர்க்க முடியாமலும், பொதுமக்களைச் சந்திக்கும் வலிமையில்லாமலும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வழக்கம்போல அவதூறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளன. திமுகவை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி சில உதிரிகளைத் தூண்டிவிட்டு, மறைமுக யுத்தம் நடத்திப் பார்க்கின்றன. தமிழ்நாட்டின் நலனுக்காகப் பாடுபடுகிற திமுக அரசையும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசையும் தமிழ்நாட்டு மக்கள் சரியாக அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்கள். அதனை ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு அளிக்கும் மகத்தான வெற்றியின் வாயிலாக நிரூபிப்பார்கள்.
நம்மை வழிநடத்தும் தலைவரும், நம் தலைவர்களுக்கெல்லாம் தலைவருமான பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறும் இடைத்தேர்தலில், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம்முடைய தொடர் வெற்றி அமையட்டும். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையில், 'வெல்வோம் 200 - படைப்போம்' வரலாறு என்பதற்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் மாபெரும் வெற்றியை எதிர்நோக்குகிறேன், உடன்பிறப்புகளின் உழைப்பினாலும், மக்கள் மீது உள்ள நம்பிக்கையினாலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications