மு.க.ஸ்டாலின் நடித்த "ஒரே ரத்தம்" படம்.. எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை கொடுத்தது.. ஆ.ராசா பேச்சு!
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுத்தில் உருவாகி தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடித்த ஒரே ரத்தம் திரைப்படம் தன்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். சாதி ஒழிப்பே அந்த படத்தின் அடிநாதம் என்று கூறிய அவர், திராவிட இயக்கத்தின் கலை, இலக்கியம், அரசியல் உணர்வே தனது வலிமையான போராட்டத்திற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பின் அவரின் குடும்பத்தில் இருந்து ஏராளமானோர் சினிமாவுக்கு வந்தனர். அவர் மகன்களான மு.க.முத்து ஏராளமான படங்களில் நடித்துள்ளவர். அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சில படங்களிலும், சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். அதில் மு.க.ஸ்டாலின் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் ஒரே ரத்தம்.

கருணாநிதி எழுத்தில் சொர்ணம் இயக்கத்தில் கார்த்திக், ராதாரவி உள்ளிட்டோர் நடித்த திரைப்படம். அந்த படத்தில் நந்தகுமார் என்ற கதாபாத்திரத்தில் மு.க.ஸ்டாலின் நடித்திருக்கிறார். 1987ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக திமுக எம்பி ஆ.ராசா பேசி இருக்கிறார்.
சென்னையில் காத்துவாக்குல ஒரு காதல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு ஆ.ராசா பேசுகையில், நான் சார்ந்திருக்கிற திமுக கலையுடன், சினிமாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலும் கூட, நான் அரசியலுக்கு வந்த 90களில் பரபரப்பின் காரணமாக அதிக நேரத்தை சினிமாவுக்கு ஒதுக்க முடியாமல் போய்விட்டது.
எப்போதாவது கலைஞருடன் புதிய படங்களின் சிறப்பு வெளியீட்டின் போது பார்த்ததுண்டு. நாங்கள் பார்த்த திரையுலகமும், இன்று இருக்கிற திரையுலகமும், நாங்கள் அனுபவித்த இசையும், இன்றைய பிள்ளைகள் அனுபவிக்கிற இசையும் இரு வேறு உலகத்தில் இருக்கிறதோ என்பது குறித்தெல்லாம் பெரிதாக ஆய்வுக்கு எடுத்து கொள்ளாதவன்.
ஆனால் காதலும், வீரமும் தமிழர்களின் வாழ்வில் இரண்டற பிணைந்திருக்கிறது என்பதை சங்க இலக்கியங்களில் இருந்து அண்ணாவும், கலைஞரும் பல்வேறு குறிப்புகளை எழுத்தில் எடுத்துக் காட்டியதை நாங்கள் படித்து வளர்ந்தவர்கள். இன்று செயல்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்தில் உருவான ஒரே ரத்தம் என்ற படத்தில் நடித்திருப்பார்.
அந்த படத்தில் சாதி ஒழிப்பு குறித்த மையக் கருத்து அடிநாதமாக இருக்கும். எப்போதும் ஒரு கருத்தை செயற்கையாகவோ, இயற்கையாகவோ நம் மீது வைத்து கொள்கிற போது, அதன் விளைவுகள் அதிகம். நானே கூட 8ஆம் வகுப்பு படிக்கும் வரை திராவிட இயக்கம், பெரியார், அண்ணா குறித்து அறியாதவன். ஒரு பேச்சுப் போட்டிக்காக தமிழாசிரியர் எழுதி கொடுத்ததை பேச சென்று அதனால் நான் பரிசு பெற்றேன்.
அதன் மூலமாக பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோரை அறிந்து இன்று 6 முறை எம்பியாகவும், 3 முறை மத்திய அமைச்சராகவும் இருந்து இருக்கிறேன் என்றால், அதற்கு திராவிட இயக்கம் கொடுத்த கலை, இலக்கியம், அரசியல் உணர்வு தான். அந்த அடிப்படையில், மு.க.ஸ்டாலின் நடித்த ஒரே ரத்தம் திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications