கேப்டன் கோஷம் போட்ட தேமுதிகவினர்! கூலாக கடந்து சென்ற முதல்வர் ஸ்டாலின்! பதற்றமடைந்த பார்த்தசாரதி!
சென்னை: தேமுதிக துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி இல்ல மணவிழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட நிலையில் அங்கு வந்திருந்த தேமுதிகவினர் கேப்டன்.. கேப்டன் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் மேடையேற வரும் போதும், மேடையிலிருந்து இறங்கி காரை நோக்கி செல்லும் போதும் கேப்டன் முழக்கத்தை எழுப்பி பார்த்தசாரதியை பதற்றம் அடைய வைத்தார்கள் அவரது கட்சியினர்.
இதனிடையே முகத்தில் எந்த கோபத்தையும் வெளிப்படுத்தாமல் சிரித்த முகத்துடன் கூலாக தேமுதிகவினரை கடந்து சென்றார் முதல்வர் ஸ்டாலின்.

தேமுதிக நிர்வாகி
தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி இல்ல மண விழா சென்னை வேப்பேரியில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது முதல்வர் முன்னிலையில் கேப்டன்.. கேப்டன்.. என ஒரு கூட்டம் பெருங்குரலெடுத்து முழங்கியது. இதனால் பதறிப்போன பார்த்தசாரதி, அமைதியாக இருங்கப்பா என்பதை சைகை மூலம் தெரிவித்து வந்தார்.

சேகர்பாபு கோபம்
ஆனாலும் பார்த்தசாரதி பேச்சை கேட்காத விஜயகாந்தின் ரசிகர்கள் கேப்டன் முழக்கத்தை நிறுத்தியபாடில்லை. இதனால் உச்சக்கட்ட கோபம் அடைந்த அமைச்சர் சேகர்பாபு, இதெல்லாம் என்னப்பா, என பார்த்தசாரதியிடம் எகிறினார். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தசாரதி சமாதானம் செய்ய முயன்றும் அட போப்பா என்கிற வகையில் கையை உதறிவிட்டு முதல்வரை அழைத்துக்கொண்டு வேகமாக சென்றுவிட்டார் அமைச்சர்.

கூலாக இருந்த முதல்வர்
இதனிடையே தாம் திருமண மண்டபத்திற்குள் நுழைந்ததும் கேப்டன் கோஷம் எழுப்பப்பட்ட நிலையில், முகத்தில் சின்ன அதிருப்தியை கூட காட்டாமல் சிரித்த முகத்துடன் கூலாக இருந்தார் முதல்வர் ஸ்டாலின். முதலமைச்சர் திருமண விழாவுக்கு வந்து சென்ற நேரத்தில் பிரேமலதா விஜயகாந்தோ, அவரது மகன்களோ, எல்.கே.சுதீஷோ அங்கு இல்லாதது குறிப்பிடத்தக்கது. கேப்டன் ரசிகர்கள் பலரும் முதல்வர் ஸ்டாலினை கண்டதும் செல்ஃபோன்களை எடுத்து தூரத்தில் இருந்தவாறே செல்ஃபி எடுக்கத் தொடங்கினர்.

முக்கிய நிர்வாகிகள்
இதேபோல் தேமுதிக முக்கிய நிர்வாகிகளான அழகாபுரம் மோகன்ராஜ், இளங்கோவன், என பலரும் மேடையில் வரிசையாக நின்று முதல்வரை வாஞ்சையுடன் வரவேற்றார்கள். நடக்கும் நிகழ்வுகளை வைத்து பார்த்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications