மரம் விழுந்து பெண் காவலர் கவிதா மரணம் - முதல்வர் ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. காவலர் கவிதா குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: பலத்த மழை காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த நூற்றாண்டு பழமையான மரம் சாய்ந்து விழுந்த விபத்தில் சிக்கி பெண் காவலர் கவிதா உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார். காயமடைந்த காவலர் முருகன் மற்றும் தீயணைப்பு வீரர் செந்தில் குமார் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ 5 லட்சம் நிவாரண உதவி அளிக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

சென்னையில் இன்று காலையில் மெரீனா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் மந்தைவெளி, கிண்டி, பல்லாவரம், மீனம்பாக்கம், போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், அசோக் நகர், கேகே நகர், பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பலத்த மழை காரணமாக சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இருந்த 75 ஆண்டுகள் பழமையான மரம் விழுந்தது. இந்த விபத்தில் பெண்காவலர் கவிதா என்பவர் உயிரிழந்தார். மரம் விழுந்த விபத்தில் காயமடைந்த போக்குவரத்துக்காவலர் முருகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நிகழ்ந்த இடத்திற்கு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் பார்வையிட்டார். மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு வந்து டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார். விபத்து குறித்து விசாரணை நடத்தினார்.

காவலர் கவிதாவிற்கு 41வயதாகிறது. மூன்று குழந்தைகள் உள்ளனர். தீபாவளி கொண்டாடப்பட உள்ள நேரத்தில் மரம் விழுந்து காவலர் உயிரிழந்தது காவல்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவிதாவின்குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை சுமார் 9.00 மணியளவில் தலைமைச் செயலக முதல்வர் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மரம் மழையின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்போது, அங்கே காவல் பணியிலிருந்த முத்தயால்பேட்டை போக்குவரத்து காவல்நிலைய தலைமைக் காவலர் கவிதா அவர்கள் மரத்தினடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த மன வருத்தமடைந்தேன்.
'
பணியிலிருக்கும்போது உயிரிழந்த தலைமைக் காவலர் திருமதி.கவிதா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கண்ட சம்பவத்தில் உயிரிழந்த திருமதி.கவிதா அவர்களின், குடும்பத்தாருக்கு உடனடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 இலட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று கவிதாவின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார் முதல்வர். காவலர் கவிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின், கூடுதலாக ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து மரம் விழுந்து உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிவாரண தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே விபத்தில் காயமடைந்த காவலர் முருகன் மற்றும் தீயணைப்பு வீரர் செந்தில் குமார் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ 5 லட்சம் நிவாரண உதவி அளிக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications