அப்ப கோடம்பாக்கத்தில் குடியிருந்தோம்! அவசரத்துக்கு கூட ஹாஸ்பிடல் போக முடியாது! ஸ்டாலின் ஃபிளாஷ்பேக்!
சென்னை: கோடம்பாக்கம் மேம்பாலம் எப்படி உருவானது என்பதற்கு சுவாரஸ்யமான ஃபிளாஷ்பேக் ஒன்றை சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். சென்னையில் நடைபெற்ற புதிய பாலம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். முதல்வர் ஸ்டாலின் கூறிய முழுத் தகவல் வருமாறு;
''நான் சிறு குழந்தையாக இருந்தபோது, முதன்முதலாக கோடம்பாக்கம் பகுதியில் குடியிருந்தோம். அரை மணி நேரத்திற்கு, முக்கால் மணி நேரத்திற்கு அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் வந்துகொண்டே இருக்கும். அதனால் ரயில்வே கேட்டை மூடுவார்கள். சில நேரங்களில் 1 மணி நேரம், 2, 3 மணி நேரங்கள் காக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். கலைஞர் பல முறை அந்த வழியாக போயிருக்கிறார். பலமுறை காத்துக் கொண்டிருந்திருக்கிறார்.''

''நான் குழந்தையாக இருக்கும்போது வீட்டில் safety pin அதாவது hook என்று சொல்வார்கள். அது திறந்த நிலையில் கீழே கிடந்தது. கைக்குழந்தையாக இருந்தபோது தரையில் தவழ்ந்து கொண்டிருந்தபோது நான் அந்த hook-ஐ முழுங்கிவிட்டேன். இதை எப்படியாவது எடுக்கவேண்டும் என்று ஏதேதோ முயற்சி செய்கிறார்கள். வீட்டில் வாழைப்பழத்தை கொடுக்கிறார்கள், கவிழ்த்துப் பார்க்கிறார்கள், ஒன்றும் முடியவில்லை. மருத்துவரிடம் போகவேண்டும் என்று முடிவு செய்து அதற்குப் பிறகு காரில் ஏற்றிக்கொண்டு வருகிறார்கள். ''
''கோடம்பாக்கம் கேட் அருகில் நின்றுவிட்டோம். அதற்குப் பிறகு கேட் திறந்த பிறகுதான் மருத்துவமனைக்கு சென்று, மருத்துவம் எல்லாம் செய்தபிறகு அந்த hook-ஐ எடுத்தார்கள். ஆனால் திறந்த நிலையில் தான் அந்த hook வந்தது. அதனால் தலைவர் கலைஞர் எஃக்கையே விழுங்கிவிட்டு உயிரோடு இருக்கிறான். அதனால் எஃகு உள்ளம் கொண்ட ஸ்டாலின் பெயரை தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு சூட்ட வேண்டும் என்று அப்போது முடிவு செய்தார்கள். நெஞ்சுக்கு நீதியில் தலைவர் கலைஞர் இதையெல்லாம் எழுதியிருப்பார்.''
''எதற்காக நான் சொல்கிறேன் என்றால், அப்போதே தலைவர் கலைஞர் அவர்கள் முடிவு செய்தாராம். hook-ஐ விழுங்கிய ஒரு குழந்தையைக் கூட கொண்டு போக முடியவில்லையே, எத்தனை பேர் அவதிப்படுவார்கள். ஆகவே, இந்த இடத்தில் பாலம் கட்டினால் என்ன என்று அப்போதே முடிவு செய்தார் தலைவர் கலைஞர். அதற்கு பிறகுதான் அந்த இடத்தில் பாலம் உருவானது. ''
''கோயம்பேடு காய்கறி அங்காடி
கோயம்பேடு பேருந்து நிலையம்
அடையாறு ஐ.டி. காரிடார்
நாமக்கல் கவிஞர் மாளிகை
பாடியில் அமைந்திருக்கக்கூடிய மேம்பாலம்
மீனம்பாக்கத்தில் இருக்கக்கூடிய பாலம்
மூலக்கடையில் இருக்கக்கூடிய பாலம்
மேற்கு அண்ணாநகர் பாலம்
வியாசர்பாடி பாலம்
தொல்காப்பியப் பூங்கா பாலம்
நீங்கள் சென்னையை வலம் வந்து பார்த்தால், நீங்கள் பார்க்கக்கூடிய பெரும்பாலான பாலங்கள் திராவிட முன்னேற்ற ஆட்சிக் காலத்தில், கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் உருவாக்கப்பட்டவை.''
''அதேபோல, அண்ணா சாலையிலிருந்து, சைதாப்பேட்டையை கடந்து மீனம்பாக்கத்திற்கு போகின்றபோது இடையில் கத்திபாரா பாலம். அந்த பாலமும் நம்முடைய கழக ஆட்சி காலத்தில்தான் தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
கோயம்பேடு பாலமாக இருந்தாலும் சரி, செம்மொழிப் பூங்காவாக இருந்தாலும் சரி, ஏன் வள்ளுவர் கோட்டமாக இருந்தாலும் சரி,நெம்மேலியில் அமைந்திருக்கக்கூடிய கடல் நீரை குடிநீராக்கும் திட்டமாக இருந்தாலும் சரி, டைடல் பார்க்காக இருந்தாலும் சரி, எல்லாமே திராவிட முன்னேற்ற ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது தான்.''












Click it and Unblock the Notifications