தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு! 13 பேர் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ.5 லட்சம்! முதலமைச்சர் உத்தரவு!
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் நிதி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியோடு கூடுதல் நிதியாக இதனை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடியில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் அவர்களின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

5 லட்சம் ரூபாய் வீதம்
அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின்மீது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 19-10-2022 அன்று நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கப்படும்" என்று அறிவித்திருந்தார்.

முதல்வர் உத்தரவு
மேற்படி அறிவிப்பினைச் செயல்படுத்திடும் வகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 65 இலட்சம் ரூபாயினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் இன்று (16-11-2022) உத்தரவிட்டுள்ளார்.

சொன்னதை செய்தார்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் கூடுதல் நிதி வழங்கும் விவகாரத்தில் சொன்னதை செய்து காட்டியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications