நாகப்பட்டினம் ரியல் ஹீரோக்கள்.. தேடிச் சென்று கௌரவித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: வாழ்க்கையில் நிஜமான ஹீரோக்களைத் தேடிப்பிடித்து விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நாகப்பட்டினம் மாவட்டம் அரசுத்துறையைச் சேர்ந்த 8 பணியாளர்களுக்கும் 4 தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும் பரிசுகளை வழங்கி அவர்களின் சேவையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டி இருக்கிறார்.

யார் இவர்கள்? இவர்கள் செய்த சாதனை என்ன?
"கடந்த 13 வருடங்களாக நான் அங்கன்வாடியில் வேலை செய்து வருகிறேன். கலைஞர் கருணாநிதிதான் எனக்கு வேலைப் போட்டுக் கொடுத்தார். இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் கையால் விருது வாங்கி இருக்கிறேன்" என்கிறார் முருகேஸ்வரி. இவர் குழந்தை சேவை மையத்தைச் சிறப்பாக நிர்வகித்ததற்காக முதல்வர் கையால் பரிசைப் பெற்றுள்ளார்.
துணை செவிலியர் காந்திமதி, "பத்து வருடங்களில் கிட்டத்தட்ட 309 பிரசவங்களைப் பார்த்திருக்கிறேன். அதைப் பாராட்டித்தான் முதல்வர் எனக்குப் பரிசு வழங்கினார். அவர் கையால் ஒரு விருதைப் பெற்றது பெரிய சந்தோஷம். என் வேலைக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம் இது" என்கிறார்

நாகப்பட்டினம் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக ஜெயராமனுக்கும் முதல்வர் கையால் விருது கிடைத்துள்ளது. அவர், "இந்த நகராட்சியில் 15 வருடங்களாகத் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறேன்.
எங்கோ கடைக்கோடி நகராட்சியில் வேலை பார்த்துவந்த என்னையும் கண்டுபிடித்து முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி இருக்கிறார். அதை நினைத்துப் பார்க்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார்.

"முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு எல்லாம் போடச் சொல்லி ஒரு டானிக் கொடுத்தார்கள். அந்த மருந்துகளை ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு எல்லாம் முறையாகத் தேடிப் பிடித்துப் போட்டேன். அந்தக் குழந்தைகள் இப்போது நல்ல வளர்ச்சியில் இருக்கின்றன.

மிகவும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கிறோம். நல்லவிதமாக தொடுவது என்றால் என்ன? கெட்ட எண்ணத்துடன் தொடுவது என்றால் என்ன?... என்பதை எல்லாம் முறையாகச் சொல்லிக் கொடுத்து வருகிறேன்.

அந்தச் சேவையைப் பாராட்டித்தான் முதல்வர் விருது தந்துள்ளார். எனக்குக் கிடைத்த வாழ்நாள் கெளரவம் இது" என்கிறார் நாகப்பட்டினம் அங்கன்வாடி பணியாளர் சம்ஸத் பேகம்.
முதல்நிலை காவலர் விக்னேஷ், "எங்கள் பகுதியில் கள்ளச்சாராயப் புழக்கம் இருந்தது. ஆகவே ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டேன். ஒருமுறை, 500 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்தி வந்த காரை மறித்துப் பிடித்தோம். அதைப் பாராட்டித்தான் முதல்வர் இந்த விருதினை வழங்கி இருக்கிறார். என் பணிக்குக் கிடைத்த சரியான சன்மானம் இது" என்கிறார் இந்தக் கடமை தவறாத காவலர்.

"கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி கடலில் போட் கவிழ்ந்து மீனவர்கள் தவறி விழுந்து தவிப்பதாகத் தகவல் வந்தது. உடனே போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு மீனவர்களைக் காப்பாற்றி கரைக்குக் கொண்டுவந்தோம். அதைப் பாராட்டித்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த விருதை வழங்கி இருக்கிறார். அவருக்கு மிகப் பெரிய நன்றி" என்கிறார் மீன்வள மேற்பார்வையாளர் விக்னேஷ்வர்.
நாகப்பட்டினத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கிராம உதவியாளராகப் பணியாற்றிவருகிறார் சேகர். இவர் கடந்த 17 ஆண்டுகளாக இப்பணியிலிருந்து வருகிறார்.

"நான் வேளாங்கண்ணியில் உதவிக் கரங்கள் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வருகிறேன். இந்தக் காப்பகம் கடந்த 30 வருடங்களாக சமூகப் பணி செய்து வருகிறது. அதன் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களை நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம்.
சுனாமி உருவானபோது பல குழந்தைகள் பாதிக்கப்பட்டன. ஆகவே அவர்களுக்காக ஒரு இல்லத்தைத் தொடங்கினோம். எனக்கு விருது அளித்து பெருமை சேர்த்த முதலமைச்சருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி" என்கிறார் ஆண்டனி.

சமூக ஆர்வலர் வெற்றியழகனுக்கு விருது கிடைத்துள்ளது. இவர் ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தினமும் உணவளித்து சேவை செய்து வருகிறார். அந்தச் சேவையைப் பாராட்டி விருது இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆதரவற்று கிடக்கும் சடலங்களை முறையாக இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட சமூக ஆர்வலர் ராஜேந்திரனுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த அங்கீகாரம் இன்னும் பல சேவை உள்ளங்களை உருவாக்கட்டும்.















Click it and Unblock the Notifications