தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை... பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வரும் இலங்கை கடற்படையின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது என ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் இலங்கை அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியா -இலங்கை இடையேயான மீனவர்கள் பிரச்சனையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இலங்கை கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் இது போன்று தொடர்ந்து தாக்கப்படுவது ஆழ்ந்த கவலையை தருவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உரிய வழிமுறைகளை கையாண்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என ஸ்டாலின் தனது கடிதத்தில் அழுத்தம் கொடுத்திருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலினின் கடிதம் மீது பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.
நாகை துறைமுகத்திலிருந்து கடந்த 11-ம் தேதி 23 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களை இலங்கை கடற்படை சுற்றி வளைத்து கைது செய்ததோடு அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தது. எல்லை தாண்டி தமிழக மீனவர்கள் மீன் பிடித்ததாக குற்றஞ்சாட்டும் இலங்கை கடற்படையினர், மீனவர்கள் 23 பேரையும் விசாரணைக்காக காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிகழ்வு மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த அதுவும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணிய சுவாமியை நவராத்திரி விழா சிறப்பு விருந்தினராக அழைத்துள்ள ராஜபக்சே, அவரை வைத்துக்கொண்டே தமிழக மீனவர்களை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. விருந்துக்குச் சென்ற சுப்ரமணிய சுவாமியும் தமிழக மீனவர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களுக்காக பரிந்துபேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இதனிடையே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 23 பேரை விடுவிக்க மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவரும் பிரதமர் மோடிக்கு தனியாக கடிதம் எழுதியிருக்கிறார். அதில் மீனவர்களின் நிலை குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications