மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. 12ம் தேதி முதல்.. ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு
சென்னை: கடந்த 2023 செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிரின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. இருப்பினும் தகுதி இருந்தும் பல பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது.. இந்நிலையில் புதிய பயனாளர்களையும் இணைத்து இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்திருக்கிறது தமிழக அரசு. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் 12ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒருகோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும்" என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 27.03.2023 அன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார், முதல் கட்டமாக சுமார் 1,13,75,492 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு உரிமைத் தொகையானது ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மகளிருக்கே நேரடியாக சென்றடையும் வகையில் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதிய பயனாளிகளை இணைத்து இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது. இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என கூறினார். அதனையடுத்து கூடுதல் மகளிர் பயனடையும் பொருட்டு, இத்திட்டம் வரும் 12ம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக விரிவுப்படுத்தப்படவுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் முன்னோடி திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த மகளிரின் வாழ்ந்த அனுபவங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டுள்ள அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் நிகழ்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முன்னிலையிலும் வருகின்ற (12-12-2025) அன்று மாலை 3 மணியளவில் நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் சமூக சேவகியும் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக காந்திய வழியில் போரடியவரும் பத்மபூஷன் விருது பெற்றவருமான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் மற்றும் 2022-ஆம் ஆண்டு சீனாவின் காங்சோவில் நடைபெற்ற மாற்றுதிறனாளர் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவருமான துளசிமதி முருகேசன் ஆகியோர் உடன் கலந்து கொள்கின்றனர்." இவ்வாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications