Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் ஸ்டாலின் திடீர் விசிட்! அன்று 3.5 லட்சம்; இன்றோ 75 ஆயிரம்? அம்மா உணவகம் பரிதாபங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் திடீரென்று அம்மா உணவகத்திற்கு நேரடி விசிட் அடித்துள்ள நிலையில், இந்தத் திட்டம் திமுக ஆட்சியில் முறையாகச் செயல்படுகிறதா? அரசு ஒதுக்கியுள்ள 21 கோடி ரூபாய் நிதி போதுமானதாக உள்ளதா என்பது பற்றி மூத்த பத்திரிகையாளர் பிரியன் பல உண்மைகளை உடைத்துப் பேசியுள்ளார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த 2013 ஆம் ஆண்டு 'அம்மா உணவகங்கள்' தொடங்கப்பட்டன. அப்போது இந்தத் திட்டம் பொதுமக்கள் பலருக்கும் பலனளிக்கும் ஒரு சிறப்பான திட்டமாகப் பேசப்பட்டது. அதன்பின்னர் 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு இந்த உணவகங்களை முறையாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

Chief Minister Stalin Amma Unavagam

குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா உணவகத்திலிருந்த ஜெயலலிதா புகைப்படத்தை திமுகவினர் சிலர் கிழித்ததாக வீடியோ ஒன்று வெளியானது. அதன்பின்னர் அதை அரசே கண்டித்தது. ஆனாலும், தொடர்ந்து இந்த ஆட்சியில் அம்மா உணவகம் முறையாக முன்பைப்போல முழு வீச்சில் செயல்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்படப் பலர் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில்தான் இப்போது 21 கோடி ரூபாய் நிதியை அம்மா உணவக திட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். மேலும் நேற்று தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் உணவகத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். உண்மையில் இந்த அரசு அம்மா உணவகங்களைப் புறக்கணிக்கிறதா? அதிமுக குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா? முதல்வர் ஸ்டாலின் திடீரென்று ஆய்வு மேற்கொள்ள என்ன காரணம்? இதைப் பற்றி மூத்த பத்திரிகையாளர் பிரியன் பலவேறு கருத்துகளை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர், "திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் புறக்கணிக்கப்படுகிறது என்று அதிமுக கடந்த 3 ஆண்டுகளாகவே ஒரு கருத்தை முன்வைத்து வருகின்றனர். அதிமுகவினர் கூறும் கருத்து முதலில் உண்மையா? இல்லை என்பதைப் பார்க்கவேண்டும். அப்படிப் பார்த்தால் புறக்கணிக்கப்படுவது உண்மைதான். திமுக ஆட்சியில் பல அம்மா உணவகங்கள் செயல்படவில்லை. இந்த உணவகங்களை நிர்வகிப்பதற்குக் கிட்டத்தட்ட 120 கோடி ரூபாய் செலவாகிறது. அதில், ஊழியர்களின் சம்பளம் மட்டுமே 70 கோடி வரை செலவாகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் மட்டும் சுமார் 4300 பேர் வேலை செய்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் மொத்தம் 407 உணவகங்கள் செயல்பட்டு வந்தன. இப்போது அவை 309 ஆகக் குறைந்துவிட்டன.

Chief Minister Stalin Amma Unavagam

திமுக ஆட்சியில் ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. எனவே உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கூட குறைந்து போய்விட்டனர். 2013இல் மூன்றரை லட்சம் பேர் சாப்பிட்டு வந்தார்கள். இன்றைக்கு அதில் 75 ஆயிரம் பேர் கூட சாப்பிடுவதில்லை. அந்தளவுக்கு எண்ணிக்கை இறங்கிவிட்டது. உணவகங்களை நடத்த 120 கோடி தேவை என்று தெரிந்தும் அரசு ஆண்டுக்கு 10 கோடி ஒதுக்கினால் அது எப்படி போதுமானதாக இருக்கும்? 2022இல் 'அம்மா உணவகங்களை' நடத்த 100 கோடி ரூபாய் தேவை என கோரிக்கை வைத்தார்கள்.

கடந்த 2023 சட்டசபையில் அம்மா உணவகங்கள் பற்றி ஒரு விவாதம் நடந்தது. அப்போது மக்கள் உணவகங்களை மூடப் போகிறார்கள் என்று பேசிக் கொண்டார்கள். அப்படி ஒரு வதந்தி பரவிய பின்னர் அரசு அதை மறுத்தது. அதற்கு அப்புறம் இன்றைக்குத்தான் அரசு 21 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது. உடனே முதல்வர் ஸ்டாலின் உணவகத்திற்குச் சென்று நேரடியாகப் பார்வையிட்டுள்ளார்.

திமுக ஆட்சியில் உணவகங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டதா? அல்லது இயல்பாக நடந்ததா? என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. அதை மறைக்க முடியாது. ஜெயலலிதா இந்த உணவகங்களைத் திறந்தபோது அதற்கு மக்களிடம் வரவேற்பு அதிகம் இருந்தது. இன்றைக்கு ஒரு ரூபாய்க்கு எங்கே இட்லி கிடைக்கிறது? 5 ரூபாய்க்குச் சாம்பார் சாதம் தரப்படுகிறது. 3 ரூபாய்க்குத் தயிர் சாதம் போடுகிறார்கள்.

இதை வருமானம் வர வேண்டி ஜெயலலிதா திறக்கவில்லை. மக்களுக்கு ஒரு சேவையாகச் செய்தார். இது தொடங்கப்பட்ட போது அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரிய அளவில் பலன்பெற்றனர். பல இடங்களில் கூலித் தொழிலாளிகளுக்கு இது வரப்பிரசாதமாக இருந்தது என்பது நிஜம்.

Chief Minister Stalin Amma Unavagam

இதில் வழங்கப்பட்ட உணவு தரமாக உள்ளது. ருசியாக உள்ளது என்று மக்களே சொன்னார்கள். இதைப் பார்த்துவிட்டது கர்நாடகாவில் 'இந்திரா கேண்டீன்' தொடங்கப்பட்டது. ராஜஸ்தானிலிருந்து வந்து இது எப்படிச் செயல்படுகிறது எனப் பார்வையிட்டார்கள். அந்தளவுக்குப் பெயரை எடுத்த ஒரு திட்டம் இது. ஆனால், இன்று உணவகம் செயல்படும் கட்டடங்கள் சரியாக இல்லை. பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. உணவுகளின் தரமும் கேள்விக்குறிதான். இதை திமுக அரசு கவனத்தில் கொள்ளவில்லை. இதற்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதாகத் தெரிகிறது.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் 500 'கலைஞர் உணவகம்' திறக்கப்படும் என்று உறுதி மொழி கொடுத்துவிட்டது. இது 331 ஆவது உறுதிமொழியாக திமுக கூறியுள்ளது. ஆனால், அதையும் திறக்கவில்லை. அதைத் திறந்திருந்தால் இந்தப் போதாமை சரி செய்யப்பட்டிருக்கும். இந்த விவகாரத்தில் திமுகவுக்கு ஒரு தெளிவான கொள்கை முடிவு இல்லை. அம்மா மருந்தகத்தை மூடினார்கள். அப்படி உணவகத்தையும் மூடுவதாக இருந்தால் செய்திருக்கலாம். அம்மா மருந்தகம் தொடங்கப்பட்டதே தற்காலிகமானதுதான். அது மத்திய அரசு அதைப்போன்று ஒரு திட்டத்தைத் தொடங்கிவிட்டது. ஆகவே அதை நடத்த முடியாது என்று சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

அம்மா உணவகம் சரியாகச் செயல்படாததைப் போலவே அம்மா குடிநீர் என்ற ஒரு திட்டமும் முறையாக இந்த ஆட்சியில் செயல்படவில்லை. இதுவும் கூட லாப நோக்கம் இல்லாமல் கொண்டுவரப்பட்டதுதான். ஜெயலலிதா அரசு கொண்டுவந்தது என்பதனால் திமுக இதைப் புறக்கணித்தது எனச் சொல்வதை நான் ஏற்கவில்லை. அப்படி ஒரு காழ்ப்புணர்ச்சியில் இதை திமுக செய்ததைப் போலத் தெரியவில்லை.

ஆனால் ஜெயலலிதா அப்படிச் செய்திருக்கிறார். தலைமைச் செயலகத்திற்கு புதிய கட்டடத்தை மு.கருணாநிதி திறந்தார். அதை ஜெயலலிதா என்னவாக மாற்றினார் என்பது மக்களுக்குத் தெரியும்? அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதும் தெரியும். அப்படி ஒருபோதும் திமுக நடந்துகொள்ளாது" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+