பிராட்வே பஸ் ஸ்டாண்ட்டுக்கு மூடு விழா! ரூ. 822 கோடியில் மல்டி மால் பணிகள் ஆரம்பம்
சென்னை: பழைய மெட்ராசின் அடையாளங்களில் ஒன்றாக இருந்துவந்த பிராட்வே பேருந்துநிலையத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டு. அங்கே புதிய மல்டி மால் ஒன்று கட்டுவதற்காக பணிகள் தொடங்க உள்ளன.
கடந்த 2000 ஆம் ஆண்டு வரையான பழைய தலைமுறைக்குச் சென்னை பஸ் ஸ்டாண்ட் என்றால் அது பிராட்வே என்பது மட்டும்தான் தெரியும். அதுதான் சென்னை தலைநகருக்கான பேருந்து நிலையமாக இருந்தது. கன்னியாகுமரியிலிருந்து காக்கிநாடா வரை போகும் அனைத்து பேருந்துகளும் இங்கேதான் வந்து போய்க் கொண்டிருந்தது. பூக்கடை பஸ் ஸ்டாண்ட் என்பது பல தரப்பட்ட மக்களின் வாழ்விடமாக இருந்தது. வண்ணாரப் பேட்டை மக்களின் பாஷையை இங்கே உணரலாம். வாலாஜாபாத் மக்களின் வாடையைக் கூட இங்கே நுகரலாம். அந்தளவுக்கு கலவையான பேருந்து நிலையமாக இது பரபரப்பாக இயங்கி வந்தது. இரவு 2 மணிக்குக் கூட மக்கள் வெள்ளம் ஜெகஜோதியாக இருக்கும்.

பிராட்வே பேருந்து நிலையம் அருகேதான் அரசு கட்டமான குறளகம் இயங்கி வந்தது. எதிரே நின்று பார்த்தால் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தெரியும். கொஞ்சம் நடந்து போனால் பாரீஸ் பஜார் இருக்கும். அப்படியே உள்ளே தள்ளி நடந்தால் கொத்தவால் சாவடி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் பரபரப்பாக இருக்கும்.
கிட்டத்தட்ட சென்னையின் இதயமாகச் செயல்பட்டு வந்த இந்த பிராட்வே பஸ் ஸ்டாண்ட் கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது மக்கள் பலரும் இவ்வளவு தூரம் உள்ள பேருந்து நிலையத்திற்குச் சென்று எப்படி வெளியூர் பயணத்தை மேற்கொள்வது எனக் கவலையைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால், அடுத்த சில வருடங்களில் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
அதன்பின்னர் பிராட்வே பேருந்து நிலையம் வடசென்னை பகுதி மக்கள் மட்டுமே அதிகம் புழங்கும் இடமாக மாறிப் போனது. இப்போது அதற்கும் ஒரு தற்கால இடைவெளி ஏற்பட்டுள்ளது. சென்னை பிராட்வே பேருந்து நிலையம் ராயபுரத்திற்கு தற்காலிகமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அருகே செயல்பட்டு வந்த குறளகம் கட்டிடத்தில் அமைந்துள்ள அரசு அலுவலகங்களும் சில கட்டிடங்கள் தள்ளி வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளன.
குறளகம் பின்புறம் இத்தனை ஆண்டுகள் செயல்பட்டு வந்த பிராட்வே எம்டிசி பேருந்து நிலையம் விரைவில் 1.5 கி.மீ தூரம் தள்ளி ராயபுரத்தில் உள்ள சென்னை துறைமுகத்திற்குச் சொந்தமான 3.46 ஏக்கர் நிலத்திற்குத் தற்காலிகமாக மாற்றப்படுகிறது. அதில் சுமார் 2 ஏக்கர் நிலத்தில் சாலைகள் அமைத்தல், நிழற்குடைகள், கழிப்பறைகள் அமைத்தல், குடிநீர் மற்றும் ஓய்வு அறைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பிராட்வே பேருந்து நிலையம் செயல்பட்டு வந்த நிலத்தில் 822 கோடி ரூபாய் மதிப்பில் மல்டி மாடல் ஹப் ஒன்றை அரசு அமைக்க உள்ளது. சென்னை மாநகர பெருநகராட்சி (ஜிசிசி) அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஒரு நாளைக்கு சுமார் 290 பேருந்துகள் இந்த பிராட்வே பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்டு வந்தன. ஆயிரக்கணக்கான பயணிகள் இதனால் பயனடைந்து வந்தனர் என தெரியவருகிறது.
சுமார் 7.1 கோடி செலவில் முனையத்தை அமைப்பதற்கான பணி ஆணை கடந்த வாரம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான ஆட்களை, இயந்திரங்களை திரட்ட ஒப்பந்ததாரருக்கு சில நாட்கள் தேவைப்படும். சாலைகள் அமைப்பது போன்ற இதர பணிகளை முடிக்க, மழை போன்ற இடையூறுகள் இல்லாமல் 35 நாட்கள் தேவைப்படும். இப்பணிகள் முடிந்த பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு ராயபுரத்தில் பேருந்து நிலையம் தற்காலிகமாகச் செயல்படும். இந்த இடைவெளியில் பிராட்வேயில் மல்டி மால் கட்டி முடிக்கப்படும் என ஒரு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
இங்கு இயங்கி வந்த சுமார் 288 கடைகள் என்எஸ்சி போஸ் ரோடு மற்றும் ஈவினிங் பஜார் பகுதிகளுக்கு மாற்றப்பட உள்ளன. மேலும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து 40 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவர்கள் இப்பகுதியைவிட்டு வெளியேறச் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆகவே, அந்தப் பகுதியையும் இடிப்பதற்காக வேலை தொடங்க உள்ளன. குறளகம் கட்டிடத்தில் இயங்கிவரும் அரசு அலுவலகங்களும் வேறு இடத்துக்கு மாற்றப்படுகின்றன.












Click it and Unblock the Notifications