போன் செய்த மறுநாளே.. மம்தா போட்ட கண்டிஷன்! ஸ்டாலினுக்குத்தான் தர்ம சங்கடம்.. என்ன முடிவு எடுப்பார்?
சென்னை: தேசிய அளவில் மாநில முதல்வர்கள் பலர் சேர்ந்து மூன்றாவது அணி அமைக்கும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை முன்னிறுத்தி இந்த கூட்டணி உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முக்கியமான கண்டிஷன் போட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. தனது பேட்டி ஒன்றின் மூலம் மம்தா பானர்ஜியே இதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக மிகப்பெரிய கூட்டணி உருவாவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. மாநில முதல்வர்கள் பலர் சேர்ந்து இந்த கூட்டணியை உருவாக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

கூட்டணி
பிரதமர் மோடியையும் பாஜக அரசையும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதேபோல் தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழ்நாட்டு முதல்வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இது போக அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே, சரத் பவார் போன்ற பல மாநில அரசியல் தலைவர்கள் பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

பாஜக எதிர்ப்பு
பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை குடையின் கீழ் இவர்கள் இணையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அகிலேஷ் யாதாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய களமிறங்கி உள்ளார். விரைவில் பிரச்சாரம் செய்யும் அவர், சமாஜ்வாதி கட்சிக்கு உத்தர பிரதேசத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் மம்தா பானர்ஜி போன் செய்து பேசினார்.

ஸ்டாலின்
பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் அதிகார அத்துமீறல் செய்வதாகவும், பாஜக ஆளாத மாநில முதல்வர்கள் இதற்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என்றும் மம்தா கோரிக்கை விடுத்தார். அதோடு முதல்வர் ஸ்டாலினை இது தொடர்பான மீட்டிங் ஒன்றிற்கு அழைத்து உள்ளார். மாநில முதல்வர்கள் பலர் இந்த மீட்டிங்கில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினும் இந்த மீட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறார். அதேபோல் கேசிஆரிடமும் மம்தா போனில் பேசினார்.

கண்டிஷன்
இந்த நிலையில் தன்னுடன் தேசிய அளவில் கூட்டணியில் இணையும் மாநில கட்சிகளுக்கு மம்தா கண்டிஷன் ஒன்றை மறைமுகமாக போட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு போன் செய்த மறுநாளே மம்தா அளித்த பேட்டியில், மதசார்பற்ற கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டிய தருணம் இது. மாநில அளவில் வலுவாக இருக்கும் மதசார்பற்ற கட்சிகள் ஒரு குடைக்கு கீழ் இணைய வேண்டிய தருணம் இது. காங்கிரஸ் கட்சி எந்த மாநில கட்சியுடனும் நல்ல உறவில் இல்லை. அதனால் காங்கிரஸ் அதன் தனி பாதையில் சென்று விடலாம்.

எங்கள் வழி
நாங்கள் எங்கள் வழியில் தனியாக செல்வோம் என்று மம்தா கூறியுள்ளார். அதாவது காங்கிரசை தேசிய அளவிலான கூட்டணியில் சேர்க்காமல் மூன்றாவது அணி உருவாக்குவதற்கான சிக்னலை மம்தா பானர்ஜி கொடுத்துள்ளார். தெலுங்கானாவில் கேசிஆர் காங்கிரசுடன் கூட்டணியில் இல்லை. இதனால் அவருக்கு காங்கிரஸ் இல்லாமல் இருப்பது பெரிய சிக்கல் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரசுடன் திமுக நெருக்கமான கூட்டணியில் உள்ளது.

ஸ்டாலின்
அதேபோல் ஸ்டாலின் - ராகுல் இடையே நல்ல நட்பும் உள்ளது. இது போக இன்னொரு பக்கம் உத்தவ் தாக்கரேவும் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி உதவியோடு ஆட்சி செய்து வருகிறார். அப்படி இருக்கும் போது மம்தா பானர்ஜியின் காங்கிரசுக்கு எதிரான இந்த பேச்சு திமுக, சிவசேனா ஆகிய கட்சிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் நிலையை உண்டாக்கி உள்ளது. மம்தாவிற்காக இவர்களை காங்கிரசை பிரிவார்களா.. அல்லது காங்கிரஸுக்காக இவர்கள் மம்தாவுடன் கூட்டணியை தவிர்ப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications