மேலும் 1 வாரம் ஊரடங்கு நீட்டிப்பா.. தளர்வுகள் அறிவிக்கப்படுமா.. அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஸ்டாலின்
தளர்வுகள் நீட்டிப்பது குறித்து இன்று முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.. இதையடுத்து, தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
2வது அலை தமிழகத்தில் மிக மோசமாக பரவியதால், தற்போது தீவிர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.. இந்த லாக்டவுன் போடவும்தான், தொற்றுகளின் எண்ணிக்கை ஓரளவு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது..
அந்த பீதியை கிளப்பி கொண்டிருந்த சென்னையிலேயே தொற்று பாதிப்பு சரிய தொடங்கி வருகிறது. எனவே, இப்போதுள்ள லாக்டவுனில் இருந்து படிப்படியாக தளர்வுகளை கொண்டு வரும் முடிவில் தமிழக அரசு உள்ளது..

எச்சரிக்கை
ஆனால், மொத்தமாக தளர்வுகளை அமலாக்கிவிட்டால், தொற்று மேலும் எகிறிவிடும் என்பதிலும் கவனமாக இருக்கிறது.. அந்த வகையில், ஓரளவு தளர்வுகளை கொண்டு வர தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.. எங்கெல்லாம் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதோ, அந்த மாவட்டங்களில் தளர்வுகள் இருக்காது என்கிறார்கள்.. அதேசமயம், கட்டுப்பாடுகளை மேலும் தீவிரமாக்கலாம் என்றே தமிழக அரசு கருதுவதாக தெரிகிறது.

கோவை
எனினும், கோவை மாவட்டத்தில்தான் தொற்று பாதிப்பு இன்னும் குறையாமல் உள்ளது.. இதுபோன்று, ஒருநாளைக்கு 600க்கும் அதிகமான கேஸ்கள் எங்கு உள்ளதோ அங்கெல்லாம் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆலோசனை
இது குறித்துதான் முதல்வர், அதிகாரிகளுடன் நேற்றுகூட ஆலோசனை நடத்தினார்.. தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா அல்லது முழு ஊரடங்கில் தளர்வுகளை அளிக்கலாமா என்பது குறித்துதான் அந்த ஆலோசனை நடந்தது... இன்று காலை 11.30 மணிக்கு மீண்டும் கூடி, ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

கூட்டம்
இந்த கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழக காவல்துறை டிஜிபி. திரிபாதி, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தளர்வுகள்?
அதேபோல, சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அப்படியே தொடரலாமா? என்பது குறித்தும் முதல்வர் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.. . ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக முடியாது என்று முதல்வர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

மேலும் ஒரு வாரம்?
சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்தாலும், சில மாவட்டங்களில் தொற்று பரவல் குறையவில்லை. எனவே ஒரு வார காலத்திற்கு ஊரடங்கை நீட்டிப்பு செய்வது சரியாக இருக்கும் என்ற பரிந்துரையைதான் சுகாதாரத்துறை சார்பாக கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.. அந்த வகையில், தொற்று குறைந்த பகுதிகளுக்கு மாவட்ட அளவிலான தளர்வுகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பும் சற்று நேரத்தில் தமிழக அரசு சார்பாக வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications