திருப்பம்.. கோவை கார் வெடிப்பு.. என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரைத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். கோவை நகரின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 3 புதிய காவல்நிலையங்களை திறக்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கோவை உக்கடம் அருகே ஈஸ்வரன் கோவில் முன்பாக அக்டோபர் 23ஆம் தேதியன்று நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு நேரடியாக கோவை வந்து விசாரணை நடத்தினார். சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த சம்பவம் கோட்டை மேடு ஈஸ்வரன் கோயில் முன்பு நடந்ததாலும், அடுத்த நாள் தீபாவளி பண்டிகை என்பதாலும் இது சதி செயலாக இருக்கும் என்ற பதற்றத்தை ஏற்படுத்தியது. மக்கள் கூடும் இடத்தில் காரை வெடிக்க திட்டமிருந்த நிலையில் காவல்துறையினர் காரை நிறுத்தியதால் கோவில் அருகில் வெடிக்கச் செய்திருக்கிறார் முபின். காரில் இருந்த சிலிண்டரை வெடிபொருட்கள் மூலம் வெடிக்கச் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேசா முபின், கடந்த 2019ஆம் ஆண்டு என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டவர். இலங்கை தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் கைது செய்யப்பட்ட கோவை அசாருதீனுடன் மிக நெருக்கமாக இருந்தவர் முபின். கேரளா சிறையில் உள்ள அசாருதீனை முபின் சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஊபா சட்டம்
இதனைத் தொடர்ந்து முபினின் கூட்டாளிகளான முகமது தல்கா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டர். கோவையில் 1998ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரியான சிறையில் உள்ள அல் உம்மா பாட்ஷாவின் சகோதரர் நவாஸின் மகன்தான் முகமது தல்கா. இவர்கள் அனைவரும் மீதும் ஊபா எனப்படும் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

என்ஐஏ விசாரணை
பொதுவாக ஊபா வழக்குகளை தேசிய புலனாய்வு முகமைதான் விசாரிக்கும். என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் அதிகார வரம்புக்குள், ஊபா வழக்குகளை விசாரிக்க முடியும். இதனால் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை என்ஐஏ இன்று தொடங்கியுள்ளது.

என்ஐஏ விசாரணைக்கு ஸ்டாலின் பரிந்துரை
இதனிடையே தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், உயரதிகாரிகள் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பிறகு கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கை என்ஐஏ விசாரிக்க பரிந்துரை செய்துள்ளார்,

பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்திடவும் முதலமைச்சர், காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

கோவையில் 3 காவல் நிலையங்கள்
கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைத்திடவும் மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல் துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கிடவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சிசிடிவி கேமராக்கள்
கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல் துறை அலுவலர்களை நியமனம் செய்திடவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஊக்கத்தொகை
இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பற்றியும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களைப் பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கிடவும், அவர்களை ஊக்குவித்திடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப.,, காவல் துறை கூடுதல் இயக்குநர் (நுண்ணறிவு) திரு. சௌ. டேவிட்சன் தேவாசிர்வாதம், இ.கா.ப., மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications