கருணாநிதி 6-ம் நினைவு நாள்-பல்லாயிரம் 'உடன்பிறப்புகளுடன்' நினைவிடத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு நாள் தமிழ்நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனையடுத்து சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியின் முடிவில் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி, அமைச்சர்கள் உதயநிதி, துரைமுருகன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
கருணாநிதியின் சரித்திரம்: இன்றைய நவீன தமிழ்நாட்டின் சிற்பியாக போற்றப்படுகிறவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. 1924-ம் ஆண்டு திருவாரூர் திருக்குவளையில் முத்து வேலர்- அஞ்சுகம் அம்மையார் மகனாக 3.6.1924 அன்று பிறந்தார் கருணாநிதி. 1938-ம் ஆண்டு தமது 14 வயதில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் பங்கேற்றார் கருணாநிதி. 1941-ம் ஆண்டிலேயே மாணவர் மன்றம் என்ற தனி அமைப்பை உருவாக்கினார். 1942-ம் ஆண்டு இன்றும் வெளிவரும் திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியை துண்டு பிரசுரமாக தொடங்கினார் கருணாநிதி.

திராவிடர் பேரியக்க தலைமகன்: 1942-ல் பேரறிஞர் அண்ணா, 1945-ல் தந்தை பெரியார் ஆகியோருடனான சந்திப்புகளுக்குப் பின்னர் திராவிடர் பேரியக்கத்தின் 'தலைமகன்களில்' ஒருவரானார் கருணாநிதி. 1949-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா, திமுகவை தொடங்கிய போது அவருடன் கை கோர்த்து நின்றார். 1953-ம் ஆண்டு கல்லக்குடி என்ற பெயர் டால்மியாபுரம் என மாற்றப்பட்டதற்கு எதிராக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து ரயில் மறியல் போராட்டம் நடத்தி சிறை சென்றார் கருணாநிதி.
தோல்வியே சந்திக்காத கருணாநிதி: 1957-ம் ஆண்டு குளித்தலை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டசபையில் காலடி வைத்தார் கருணாநிதி. அதன் பின்னர் போட்டியிட்ட அத்தனை சட்டசபை தேர்தல்களிலும் வென்று சரித்திரம் படைத்தவர் கருணாநிதி. தமிழ்நாடு சட்டமேலவை உறுப்பினராகவும் இருந்தார். 1960-ல் திமுகவின் பொருளாளரானார். 1962-ல் மீண்டும் எம்.எல்.ஏ.வாக வென்று திமுக சட்டசபை குழு துணைத் தலைவரானார். 1963-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டக் குழு தலைவராக பிரகடனம் செய்யப்பட்டார். 1965-ம் ஆண்டு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் கைது செய்யப்பட்டார்.

6 ஆண்டுகளுக்கு முன் பிரியா விடை: 1969-ம் ஆண்டு அண்ணா மறைவுக்குப் பின்னர் தமிழ்நாடு முதல்வரானார் கருணாநிதி. அத்துடன் திமுகவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டின் முதல்வராக, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக, மத்தியில் அரசாங்கங்களை அமைப்பதை தீர்மானிக்கும் கிங் மேக்கராக இந்திய அரசியலின் தென்னிந்தியாவின் முகமாக திகழ்ந்தவர் கருணாநிதி. இன்றைய தமிழ்நாட்டை வளப்படுத்திய மேம்படுத்தியவர் கருணாநிதி. சமூக நீதி கொள்கையில் எந்த சமரசமும் செய்யாதவர். 2018-ம் ஆண்டு இதே ஆகஸ்ட் 7-ந் தேதி வயது முதுமை, உடல்நலன் பாதிப்பால் தாம் நேசித்த தமிழர்களிடம் இருந்தும் தமிழ் மண்ணிடம் இருந்தும் பிரியா விடை பெற்றார் கருணாநிதி.

6-வது ஆண்டு நினைவு நாள்: கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு நாள் தமிழ்நாடு முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்டது. திருச்சியில் கருணாநிதி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். பின்னர் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் கருணாநிதி சிலைக்கு கீழே வைக்கப்பட்ட உருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனையடுத்து சென்னை வாலஜா சாலையில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி தொடங்கியது.
VIDEO | Tamil Nadu CM MK Stalin (@mkstalin) pays tribute to Kalaignar Karunanidhi on latter's death anniversary at Omandurar multi super speciality hospital in Chennai.
— Press Trust of India (@PTI_News) August 7, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/MAhPq70rJG
நினைவிடத்தில் மரியாதை: இந்த பேரணி சென்னை மெரினா கடற்கரையை சென்றடைந்தது. மெரினா கடற்கரையில் முதலில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்பி, அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இந்த அமைதிப் பேரணி நிகழ்வில் ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்று கருணாநிதி புகழ் முழக்கங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications