வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பத்திரமாக தாயகம் திரும்பிடத் தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டு,பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில்," தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வளைகுடா பகுதி முழுவதும் வேலை செய்து வருகிறார்கள். இந்த நாடுகளில் 19 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அங்கு நாளுக்கு நாள் தற்போது நிலவி வரும் பாதுகாப்பு நிலைமை அவர்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மற்றும் மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போரினால், மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் தற்போது சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பு மற்றும் வெளியேற்றம் தொடர்பாக மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் தலையீட்டைக் கோருவதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

முக ஸ்டாலின் மோடிக்கு கடிதம்
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிடும் வகையில், தமிழ்நாடு அரசு, சென்னையிலும், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் 24 X 7 அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. அதன்மூலம் இதுவரை உதவி கோரி சுமார் 2,600 அழைப்புகள் வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இந்தியாவுக்குத் திரும்புவதற்கான உதவியைக் கோரியும், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து விமானங்கள் கிடைப்பது குறித்து தெளிவு கோரியும் வந்துள்ளது.
வெளியுறவு அமைச்சகம்
இந்த அழைப்புகள் மற்றும் அதைத் தொடர்ந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சிக்கித் தவிக்கும் சுமார் 1,000 தமிழர்களின் விவரங்கள் ஏற்கனவே தொகுக்கப்பட்டு, தேவையான தொடர் நடவடிக்கை மற்றும் உதவிக்காக வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியத்தில் உள்ள சம்பந்தப்பட்ட இந்தியத் தூதரகங்களுடன் அவை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
வளைகுடா தமிழர்கள்
தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் காரணமாக, பஹ்ரைன், குவைத் போன்ற நாடுகளின் சில இடங்களிலிருந்து விமான நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன. இதன் விளைவாக, சிக்கித் தவிக்கும் பலர் சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற அண்டை நாடுகளில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு சாலை வழியாகப் பயணிக்க வேண்டியுள்ளது. இந்தியாவுக்கு அவர்களைத் திருப்பி அனுப்ப உரிய விசாக்கள் முக்கியமான தேவையாக தற்போது உள்ளது.
இந்திய அரசு
மேலும், சிக்கித் தவிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக தற்போது செயல்பட்டு வரும் விமான நிலையங்களை அடைந்து, விரைவில் இந்தியா திரும்புவதற்குத் தேவையான போக்குவரத்து அனுமதிகள் மற்றும் விசாக்களை வழங்க இந்திய அரசு உரிய வசதிகளைத் செய்து தர வேண்டும்.
விமானப் போக்குவரத்து
இன்றைய நிலவரப்படி, வெளிநாட்டு விமானப் போக்குவரத்து மூலம், அங்கு சிக்கித் தவித்த 5,256 பயணிகள் 16 விமானங்களில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்களை வெளியேற்றக் கோருவதைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பாகவும், சரியான நேரத்திலும் அவர்கள் சென்னைக்குத் திரும்புவதற்கு வசதியாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூடுதலாக சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்திட வேண்டும்
தமிழ்நாடு அரசு
அதேபோன்று, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 593 மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு, ஈரானில் உள்ள தீவுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களை பத்திரமாக தாயகம் கொண்டுவர மீனவர்களின் குடும்பத்தினர் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மீனவர்களின் பாதுகாப்பையும், அவர்கள் பாதுகாப்போடு தாயகம் திரும்புவதையும் உறுதி செய்திட ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழர்கள் தவிப்பு
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு உடனடியாக உரிய உதவிகளைச் செய்திடவும், அவர்களைப் பாதுகாப்பாக தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதை உறுதி செய்வதற்கு விரைவான நடவடிக்கைகளை எடுத்திடவும், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிட வேண்டும்.எதிர்பாராத இந்த உலகளாவிய நெருக்கடியைக் கையாள்வதற்கு இந்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு அரசு முழு ஆதரவையும் வழங்கும்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications