செலவழிக்கவில்லையா? நிதியை சரியான நேரத்தில் கொடுக்கனும்! மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட ஒன்றிய அரசின் பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவித்திட வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ," ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் 31-01-2025 ஆம் நாளிட்ட கடிதத்தில், திறன்மிகு குழந்தைகள் (Mission Saksham Anganwadi & POSHAN 2.0), மிஷன் சக்தி (Mission Shakthi) மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டம் (Mission Vatsalya) போன்ற ஒன்றிய அரசின் நிதியுதவித் திட்டங்களுக்கு, 29-1-2025ஆம் நாள் நிலவரப்படி ரூ.716.05 கோடி செலவழிக்கப்படாமல் உள்ளது எனத் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டில் அனைத்து நலத் திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், ஒன்றிய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்களிப்பு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முறையாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான நேர்வுகளில், ஒன்றிய அரசின் நிதிப்பங்கு காலாண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலோ மட்டுமே வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், நிதியாண்டின் முடிவிற்குள் ஒன்றிய அரசு ஒதுக்கும் தொகையை மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்குக் குறுகிய காலத்திற்குள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்னும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 304 கோடி ரூபாயில், ஒன்றிய அரசின் பங்குத் தொகையான 184 கோடி ரூபாய் இதுநாள் வரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதால், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் உரிய காலத்தில் வரவு வைக்க இயலாமல் உள்ளதையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இன்றைய தேதியில், ஒற்றை ஒருங்கிணைப்பு முகமை (Single Nodal Agency) கணக்குகளில் உள்ள 576.22 கோடி ரூபாயில், இந்த நிதியாண்டு முடிவதற்குள் ரூ.482.80 கோடி பயன்படுத்தப்படும் என்றும், மீதமுள்ள தொகை ஒன்றிய அரசின் பங்காக அடுத்த நிதியாண்டுக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் தனது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட ஏதுவாக, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் அதாவது அந்தந்த நிதியாண்டுக்குள்ளேயே விடுவித்திட வேண்டுமென்றுதமிழ்நாடு முதலமைச்சர், ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications