“மிஷன் 1”.. அமைச்சர் உதயநிதி “சக்சஸ்”.. பூரித்துப்போன ஸ்டாலின்! விளையாட்டுத் துறையின் கேப்டனாம் -ஆஹா
சென்னை: நேற்று நடைபெற்ற சர்வதேச ஸ்குவாஷ் போட்டி நிறைவு விழாவில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விளையாட்டுத் துறையின் கேப்டன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி இருக்கிறார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் நிறைவு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினார்.

இந்த விழாவில் பேசிய அவர், "தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து, இந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பையை நடத்திய அனைவருக்கும் முதலில் என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். விளையாட்டு வீரர்களிடையே கவனத்தை ஈர்க்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு அமைய இது காரணமாக அமையும்.
கடந்த ஆண்டு உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடந்தது. அதன்மூலமாக, தமிழ்நாடு உலகப் புகழ் அடைந்தது. உலக சதுரங்க ஒலிம்பியாட் போட்டியானது அதற்கு முன்பு இந்தியாவில் நடந்ததே இல்லை. முதன் முதலாக அதுவும் தமிழ்நாட்டில் நடந்தது. அது நமக்குக் கிடைத்த மிகப்பெரும் பெருமை.
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த திட்டமிட்ட உடனேயே அதற்காக 102 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. இதுபோன்ற பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு குறைந்தபட்சம் 18 மாதங்கள் ஆகும் என்பார்கள். ஆனால் நான்கே மாதங்களில் பன்னாட்டுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செய்தது.
உலகமே வியக்கும் அளவுக்கு போட்டியையும் நாம் நடத்திக் காட்டினோம். தமிழ்நாட்டில் தாங்கள் எப்படி அன்போடும். மரியாதையுடனும் கவனிக்கப் பட்டோம் என்பதை உலக செஸ் விளையாட்டு வீரர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார்கள். இதனை விட எங்களுக்கு வேறு பெரிய பாராட்டு நிச்சயமாக இருக்க முடியாது.
அத்தகைய கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும்தான், இப்போதும் இந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பை அரசு ஒத்துழைப்புடன் நடைபெற்றுள்ளன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அவர்கள், இதுபோன்ற போட்டிகளை தனிப்பட்ட சம்மேளனங்கள் நடத்தும் போட்டிகளாக அல்லாமல் அரசு நடத்தும் போட்டிகளைப் போலவே உதவிகளை செய்து வருகிறார்.
விளையாட்டுத் துறையின் கேப்டனாக இருந்து அனைத்து வகை விளையாட்டு வீரர்களையும் சாம்பியன்களாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். அவருக்கும் அவரது துறையைச் சார்ந்த உயரதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
உலகின் முன்னணி ஸ்குவாஷ் வீரர்கள் கலந்துகொண்டுள்ள இந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணியில் 4 வீரர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அகாடமியில் தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் சங்கத்தால் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் பெருமைக்குரிய ஒன்று.
நமது மாநிலம் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்களில் 80 நபர்களைக் கொண்டு பலம் பெற்றுள்ளது. நமது மாநிலத்தில் ஸ்குவாஷ் துறையில் 5 அர்ஜுனா விருது பெற்றவர்களும், பத்மஸ்ரீ விருது பெற்ற ஒருவரும் உள்ளனர். நம் மாநிலத்தின் முன்னணி ஸ்குவாஷ் வீரர்களான ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல், சவுரவ் கோஷல் மற்றும் அபய் சிங் ஆகியோர் தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பவர்களாக உள்ளனர்." என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications