இலங்கையிடம் இருந்து தமிழகத்தின் 15 மீனவர்கள், 100 மீன்பிடி படகுகளை மீட்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: இலங்கை கைது செய்த 15 தமிழக மீனவர்கள் மற்றும் 100 மீன்பிடி படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள கடற்பரப்பில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டி கைது செய்து வருகிறது. அத்துடன் தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

15 மீனவர்கள் கைது
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 5-ந் தேதி பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். தலைமன்னார் அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள், கடல் எல்லையை தாண்டிவிட்டதாக இலங்கை கடற்படை குற்றம்சாட்டியது. மேலும் தமிழக மீனவர்கள் 15 பேரை 2 விசைப்படகுகளுடன் விசாரணைக்கு அழைத்துச் சென்று கைது செய்தது இலங்கை கடற்படை. அந்தோணி ராயப்பன், இம்ரோன் ராபின்சன், லியோ, ஜாய்சன், எஸ்ரா, முருகன், நம்புமிலன், காளிமுத்து, வினோத், நம்புகுமார் உள்ளிட்ட 15 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதில் ராபின்சன் 14 வயது சிறுவன்.

மீனவர்கள் போராட்டம்
தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கையால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இக்கைது நடவடிக்கையைக் கண்டித்தும் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டுள்ளனர். தங்கச்சிமடத்தில் நாளை மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

முதல்வர் கடிதம்
இந்நிலையில் தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுகின்றனர்; இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதனைத் தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

100 மீன்பிடி படகுகள்
மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 15 தமிழக மீனவர்கள், அவர்களது 2 விசைப்படகுகள் மற்றும் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக மீனவர்களின் 100 மீன்பிடி படகுகள் ஆகியவற்றை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். குஜராத்தை சேர்ந்த ஒரு மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் கடற்படை மீது வழக்கு பதிவு செய்து தூதரக நடவடிக்கை எடுத்தது மத்திய அரசு. அதேபோல ஒரு கடும் நடவடிக்கை தேவை என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications