செப்டிக் டேங்கை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பலி.. பலியானோர் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி
சென்னை: ஆவடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், மத்திய படை உடை தயாரிப்பு தொழிற்சாலையின் (ஓசிஎஃப்) குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்புப் பகுதியில் உள்ள கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களான மோசஸ் மற்றும் தேவன் ஆகியோர் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். அப்போது தொழிலாளர்கள் இருவரும் விஷவாயு தாக்குதலுக்கு உள்ளாகினர்.

இதைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து ஆவடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், தொட்டியில் இருந்த தொழிலாளர்கள் இருவரையும் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி தொழிலாளர்கள் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து ஆவடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, கிரி நகர் குடியிருப்பு பகுதியில், சென்னை, ஆவடியைச் சேர்ந்த தேவன் த/பெ. சின்னையா (வயது 50) மற்றும் சென்னை, பட்டாபிராமைச் சேர்ந்த மோசஸ், த/பெ.குப்பையா (வயது 39) ஆகிய இரண்டு ஒப்பந்தத் தொழிலாளர்களும் இன்று (7-9-2023) காலை செப்டிக் டேங்கை சுத்தம் செய்த போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications