திருவொற்றியூரில் வீடிழந்த 24 குடும்பங்களுக்கும் தலா ஒரு லட்சம் நிவாரணம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: 24 குடும்பங்களுக்கும் தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குப்பத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் உள்ளது. இது 1996 ஆம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் 365 வீடுகள் உள்ளன.
இந்த கட்டடத்தில் டி பிளாக்கில் உள்ள 24 வீடுகளும் தரைமட்டமாகின. அது போல் சி பிளாக்கின் ஒரு பகுதியும் விழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு அமைச்சர் தா மோ அன்பரசன், காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் சென்றனர்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில், திருவொற்றியூரில் தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் 1993-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.
விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா மோ அன்பரசனை நிவாரண பணிகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்து விபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்று குடியிருப்புகள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பிலிருந்து மீண்டும் புதிய வாழ்க்கையைத் துவங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இது போன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விபரங்களைச் சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன் என செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications