மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள் பலியான சம்பவம்.. நிதி உதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: மாமல்லபுரம் அருகே உள்ள பண்டிதமேடு பகுதியில் ஓஎம்ஆர் சாலையோரம் நின்றிருந்த பெண்கள் மீது கார் மோதிய பயங்கர விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பையனூர் மதுரா பண்டிதமேடு சந்திப்பு பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கால்நடைகளை மேய்ப்பது வழக்கம். வழக்கம்போல இன்று பிற்பகல் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு ஒஎம்ஆர் சாலையோரம் நின்றிருந்துள்ளனர்.

அப்போது, சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கிச் சென்ற கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் அமர்ந்திருந்த பெண்கள் மீது மோதியுள்ளது. இதில், யசோதாம்மாள், லோகம்மாள், கௌரி, விஜயா, ஆந்தாயி ஆகிய 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காரில் வந்தவர்களில் 2 இளைஞர்களை அப்பகுதி மக்கள் பிடித்து தாக்கிய நிலையில், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், பழைய மாமல்லபுரம் சாலை, பையனூர் மதுரா பண்டிதமேடு சந்திப்பில் இன்று (27.11.2024) பிற்பகல் 2.20 மணியளவில் திருப்போரூர் வட்டம், பையனூர் கிராமம், பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த திருமதி.ஆந்தாயி (வயது 71) க/பெ.முத்தன், திருமதி.லோகம்மாள் (வயது 56) க/பெ.சின்ராஜ், திருமதி.யசோதா (வயத 54) க/பெ.கோவிந்தசாமி, திருமதி.விஜயா (வயது 53) க/பெ.சாமிநாதன் மற்றும் திருமதி.கௌரி (வயது 52) க/பெ.குப்பன் ஆகிய 5 பெண்கள் சாலையோரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திருப்போரூரிலிருந்து மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த TN11 J 7270 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் மேற்குறிப்பிட்ட 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications