TET தேர்வு விவகாரத்தில் ஒருபோதும் ஆசிரியர்களை திமுக அரசு கைவிடாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி!
சென்னை: ஆசிரியர்களின் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திராவிட மாடல் அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களைக் கைவிடாது என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. ஜாக்டோ ஜியோ சங்கம், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் வலியுறுத்தி வருகிறது.

ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு தொடர்பாக சென்னையில் அமைந்துள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளையும் கோரிக்கைகளையும் தெரிவித்தனர். 55க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், அரசு ஆசிரியர்களின் பணி பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யப்படாது என்றும் சட்ட விதிமுறைகளின்படி தொடர்ந்து போராடுவோம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்துப் பேசினார். அப்போது திமுக வழக்கறிஞரும், எம்.பி.யுமான வில்சன் உடன் இருந்தார்.
அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து, 2011-ஆம் ஆண்டிற்கு முன்பு பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியராக பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது குறித்தும், ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வினை போக்கும் வகையில் நேற்று தனது தலைமையில் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது குறித்தும், அக்கூட்டத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகளை முதல்வரிடம் தெரிவித்தார்.
இதைடடுத்து, அடுத்த எடுக்கவேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூறிய முதல்வர் ஸ்டாலின், ஆசிரியர்களின் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திராவிட மாடல் அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களைக் கைவிடாது என்றும் உறுதியளித்துள்ளார்.
மேலும், விரைவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து இதுதொடர்பாக முக்கிய கோரிக்கையை முன்வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications