விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்ட 10 அறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளரும் முதுபெரும் பெரியார் தொண்டருமாகிய விடுதலை க.ராஜேந்திரன் உள்ளிட்ட 10 அறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள வள்ளுவரின் திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 2025-ம் ஆண்டிற்கான வள்ளுவர் மற்றும் 2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பல்வேறு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
2025-ம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது பெரும் புலவர் மு.படிக்கராமுவுக்கு வழங்கப்பட்டது.
2024-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது திராவிடர் விடுதலை கழகத்தி ன் பொதுச்செயலாளர் விடுதலை க. இராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது.

பேரறிஞர் அண்ணா விருது மூத்த திமுக தலைவர் எல்.கணேசனுக்கு வழங்கப்பட்டது. எல்.கணேசன் மகன் அண்ணா இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.
அண்ணல் அம்பேத்கர் விருது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலார் ரவிக்குமார் எம்பி, பெருந்தலைவர் காமராசர் விருது மூத்த காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலன், பாவேந்தர் பாரதிதாசன் விருது பொன். செல்வகணபதி, கலைஞர் விருது முத்து வாவாசி, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வே.மு.பொதியவெற்பன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அனைவருக்கும் பொன்னாடை, பதக்கம், விருது மற்றும் காசோலை வழங்கி சிறப்பித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications