ஆட்சியில் பங்கு.. தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது.. இந்தியா டுடே நிகழ்ச்சியில் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: ஆட்சியில் பங்கு என்ற வாதம் தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியா டுடே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், அரசியலைத் தாண்டி ராகுல் காந்தியை ஒரு சகோதரராக பார்ப்பதாகவும், திமுக - காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்ற ஸ்டாலின், மற்றவர்கள் நினைப்பது நடக்காது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தரப்பில் அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறது. இதுதொடர்பாக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியா டுடே கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அதில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும்.. அவர்களுக்கும் தெரியும்.. திமுக - காங்கிரஸ் கட்சிக்கு இடையிலான கூட்டணியில் சிலர் குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டு செயல்படுகின்றனர்.
அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என்னுடைய சகோதரர் போன்றவர். சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் நன்றாக இருக்கும். எங்கள் கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா என்பதற்காக சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர். சிலரின் சதி பற்றி நாங்களும் கவலைப்படவில்லை.. அவர்களும் கவலைப்படவில்லை..
ஆட்சியில் பங்கு என்ற பேச்சே தற்போது எழவில்லை. 2021 சட்டசபைத் தேர்தலை விடவும் 2026 சட்டசபைத் தேர்தல் கடினமாக இருக்கும் என்பது போல் எதிர்க்கட்சிகள் மக்களை குழப்ப பேசுகின்றனர். கருணாநிதியிடம் இருந்து உழைப்பை கற்றுக் கொண்டேன்.. அதையே எனது மகனுக்கு கற்றுக் கொடுக்கிறேன். எதையும் எதிர்பார்க்காமல் உழைத்தால் தான் அரசியலில் முன்னுக்கு வர முடியும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications