கிண்டி கலைஞர் மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்தி குத்து.. விரிவான விசாரணைக்கு முதல்வர் உத்தரவு!
சென்னை: கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் டாக்டர் பாலாஜியை, நோயாளியின் உறவினர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காத வகையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மேலும் சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தனது x தளத்தில், "கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் திரு. பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்" என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதேபோல தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன், "கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் டாக்டர் பாலாஜி அவர்கள் தாக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது வேதனை அளிக்கக் கூடியது தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது என்பதையே இது காட்டுகிறது.
மருத்துவர்கள் அனைத்து நோயாளிகளையும் பாகுபாடற்ற மனநிலையிலேயே சிகிச்சை அளிக்கிறார்கள் நோயாளியின் உறவினர்கள் தங்கள் உறவினர்கள் நோயோடு போராடுகிறார்கள் என்ற வேதனை அவர்களுக்கு இருக்கலாம் ஆனால் அது மருத்துவர்களை தாக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கக் கூடாது.
மருத்துவர்களுக்கு நோயாளிகளுக்கும் நோயாளிகளின் உறவினருக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்.. ஆனால் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது என்பது வேதனை. மருத்துவர் இதய நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து இருக்கிறார்.. அவர் பூரண குணமடைய வேண்டும் என்று பிராத்திக்கிறேன். மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். குற்றத்தில் ஈடுபட்டவர் பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பது தெரிய வந்திருக்கிறது. இவரது தாய்க்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்திருக்கிறது. விக்னேஷை போலீசார் கைது செய்துள்ளனர். அதே நேரம் கத்தி குத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. எனவே இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications