மயிலாப்பூர் இரட்டை கொலை..6 மணி நேரத்தில் குற்றவாளிகள் பிடிபட்டது எப்படி! முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
சென்னை: மயிலாப்பூரில் வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த்- அனுராதா தம்பதி அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் வீட்டில் பணிபுரிந்து வந்த கிருஷ்ணா அவரது நண்பர் உடன் சேர்ந்து ஆடிட்டரையும் அவரது மனைவியையும் கொலை செய்துள்ளது தெரிய வந்தது.

மயிலாப்பூர் இரட்டை கொலை
டிரைவர் கிருஷ்ணாவிடம் மேற்கொண்ட விசாரணையில், ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா இருவரையும் மயிலாப்பூர் வீட்டிலேயே கொலை செய்து, கிழக்கு கடற்கரைச் சாலை, நெமிலிசேரி கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டம் செயல்பட்டு வரும் இடத்திற்கு எதிரே உள்ள ஸ்ரீகாந்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் புதைத்ததும் தெரிய வந்தது. கொலை செய்து புதைத்துவிட்டு, பீரோவில் இருந்த சுமார் ரூபாய் 20 லட்சம் பணம் , நகை ஆகியவற்றைக் கொள்ளை அடித்துச் சென்றதும் தெரிய வந்தது. சில மணி நேரத்தில் கொலையாளிகளைப் பிடித்த போலீசாரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றன.

தமிழக சட்டசபை
இதனிடையே மயிலாப்பூர் இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளை வெகு விரைவில் பிடித்த போலீசாருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பாராட்டு தெரிவித்தார். சட்டசபையில் இன்று தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டம், ஒழுங்கு குறித்துப் பல கேள்விகளை எழுப்பினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "எதிர்க் கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு நாளை பதிலுரையில் விரிவாகப் பதில் அளிக்கிறேன். இன்று மயிலாப்பூரில் நடைபெற்ற சம்பவத்தைக் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். அதற்கு மட்டும் விளக்கத்தைச் சொல்ல விரும்புகிறேன். சென்னை மயிலாப்பூரில் குடியிருந்த அமெரிக்காவிலிருந்து திரும்பிய தம்பதி ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா காணாமல் போனது குறித்து அன்று மதியம் 1 மணி அளவில் புகார் பெறப்பட்டது.

குற்றவாளிகள் கைது
உடனடியாக மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. இதற்காகச் சிறப்புத் தனிப்படைகளும் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டது. தொழில்நுட்ப உதவியோடு, ஸ்ரீகாந்துக்கு சொந்தமான இன்னோவா காரோடு அவரது ஓட்டுநர் ஆந்திராவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக செயல்பட்ட போலீசார், எவ்வித தாமதமின்றி, ஆந்திர போலீசாரின் ஒத்துழைப்புடன் பிரகாசம் மாவட்ட சோதனை சாவடியில் இன்னோவா காரை பிடித்துள்ளனர்.

வெறும் 6 மணி நேரம்
அவர்களிடம் இருந்து திருடப்பட்ட தங்க நகைகள், 50 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன. மேலும், ஈசிஆரில் உள்ள பண்ணை வீட்டில் இருந்தும் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. இது முழுக்க முழுக்க ஆதாயக் கொலை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேநேரம் முழு விசாரணையும் இப்போது நடைபெற்று வருகிறது. இந்த இரட்டை கொலையில் 6 மணி நேரத்திற்குள் கொலையாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர்.

பாராட்டு
விரைவாகக் கொலையாளிகளைக் கண்டுபிடித்த சென்னை மாநகர காவல்துறைக்கும், தனிப்படை போலீசாருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதையும் அலட்சியப்படுத்தாமல், உடனுக்குடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் துறையாகவே இந்த ஆட்சியில் இருக்கும் காவல்துறை உள்ளது என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கு நினைவூட்டுகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications