கபில் சிபல் பெற்ற வெற்றி.. குஷியான தமிழக முதல்வர் ஸ்டாலின்! நீதி நிலைநிறுத்தப்படும் என நம்பிக்கை!
சென்னை: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மூத்த வழக்கறிஞர் கபில் சிபலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெற்றி பெற்றுள்ளார். கபில் சிபல் மொத்தம் ஆயிரத்து 66 வாக்குகள் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட மற்றொரு மூத்த வழக்கறிஞர் பிரதீப் ராயை தோற்கடித்துள்ளார். கபில் சிபலை எதிர்த்து போட்டியிட்ட மூத்த வழக்கறிஞரான பிரதீப் ராய் 689 வாக்குகள் பெற்றுள்ளார்.

ஹார்வார்டு சட்ட பள்ளியில் பட்டம் பெற்ற கபில் சிபல், இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக 1989-90 காலகட்டத்தில் பதவி வகித்தார். தொடர்ந்து, 1995-1996 மற்றும், 1997, 1998 ஆண்டுகளில் வழக்கறிஞர் சங்க தலைவராக செயல்பட்டுள்ளார். மூன்றாவது முறையாக கடந்த 2001 ஆம் ஆண்டு வழக்கறிஞர் சங்க தலைவர் பொறுப்பை கபில் சிபல் வகித்தார்.
இந்த நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கபில் சிபல் பார் கவுன்சில் தலைவராவது இது நான்காவது முறை. காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார் கபில் சிபல்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் தேர்தலில் கபில் சிபல் வெற்றி பெற்றதை காங்கிரஸ் கட்சி கொண்டாடி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "தேசிய அளவில் வரப்போகும் மாற்றத்திற்கான ஒரு டிரெய்லர் தான் இது" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபலுக்கு வாழ்த்துகள்!
அவரது வெற்றி பார் கவுன்சிலின் சுதந்திரமும் நமது அரசியலமைப்பு விழுமியங்களும் பாதுகாப்பான கைகளில் இருப்பதை உறுதி செய்கிறது. இந்திய மக்கள் ஆழமாகப் போற்றும் நீதி மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்த அவரது தலைமையின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications