கோட்டை இருந்தாலும் புல்லை வெட்ட மாநில அரசுக்கு உரிமை இல்லைனு கருணாநிதி சொல்வார்! ஸ்டாலின் அட்டாக்
சென்னை: மத்திய அரசிடம் மாநில அரசுகள் நிதி கேட்கும் நிலைதான் இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும் திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள், செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள் என மூன்று விழாக்களையும் இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படும்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. பெரியார் விருது - பாப்பம்மாள், அண்ணா விருது - அறந்தாங்கி நிஷா ராமநாதன், கலைஞர் விருது - எஸ்.ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது - கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது - வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் புதியதாக விருது பட்டியலில் சேர்க்கப்பட்ட 'மு.க.ஸ்டாலின் விருதை' தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் இரு பெரிய நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதில் ஒரு நாற்காலிக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு என்றால் இன்னொன்று யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. அந்த இன்னொன்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அமர்ந்து முதல்வரை வாழ்த்தி பேசுவது போல் அமைந்திருந்தது.
இந்த பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் கிரீம் பன்னிற்கு எவ்வளவு வரி என கேட்க முடியாத நிலை உள்ளது. கோட்டை இருந்தாலும் புல்லை வெட்ட மாநில அரசுக்கு உரிமை இல்லை என கருணாநிதி கூறுவார். நிதி உரிமைக்கும் இன்னும் மத்திய அரசிடம் மாநில அரசுகள் போராட வேண்டிய நிலை உள்ளது.
குறைந்த அளவு கிடைக்கும் நிதியை வைத்தே சிறப்பாக செயல்பட்டுள்ளோம். முழு நிதியும் கிடைத்துவிட்டால் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கலாம். திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு உள்ளது. திமுக தொடங்கி 25 ஆவது ஆண்டு, 50 ஆண்டு, 75 ஆவது ஆண்டு ஆகிய இடங்களில் ஆட்சியில் இருந்துள்ளோம்.
அடுத்து வரும் தேர்தலிலும் திமுகவே வெல்லும், 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான் நமது இலக்கு. இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை, தொண்டர்களின் மீதான நம்பிக்கையில் கூறுகிறேன் எந்த ஒரு மாநில அரசும் செய்யாதவரையில் திமுக, தமிழகத்தை வளப்படுத்தி இருக்கிறது. மாநிலங்களுக்கு உரிமைகளை வழங்கும் அரசு மத்தியில் அமையவில்லை. இவ்வாறு ஸ்டாலின் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications