தமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவித்திடுக! நீதித்துறை விழாவில் முதல்வர் முன்வைத்த 3 கோரிக்கைகள்!
சென்னை: தமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஒரே மேடையில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் இந்தக் கோரிக்கையை முன் வைத்தார்.
மேலும், நீதித்துறையில் நாட்டு மக்களின் நம்பிக்கையாக நீதிபதி என்.வி.ரமணா திகழ்கிறார் என முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

புதிய கட்டிடங்கள்
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தில் 8 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள்; நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் 11 கோடியே 93 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள்; என மொத்தம் 20 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீதிமன்றக் கட்டடங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் என்.வி. ரமணா திறந்து வைத்தார்.

முதல்வர் பேச்சு
சென்னை எழும்பூரில், வணிக சம்பந்தமான வழக்குகளை விசாரிப்பதற்கென 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக நீதிமன்றத்திற்கான கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், அனைத்து தரப்பு மக்களுக்கும் விரைந்து நீதி கிடைத்திட வேண்டும் எனக் கூறினார். சட்டத்தின் குரலாக மட்டுமல்லாமல் மக்களின் குரலாகவும் நீதிபதி ரமணா செயல்படுகிறார் என புகழாரம் சூட்டினார்.

சேம நல நிதி
வழக்கறிஞர்களுக்கான குடும்ப சேம நல நிதி ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். மேலும், தமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும், உச்சநீதிமன்ற கிளைய சென்னையில் அமைக்க வேண்டும், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முன் வைத்தார்.
Recommended Video

சட்டத்தின் ஆட்சி
தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கக் கூடிய ஆட்சியானது சட்டத்தின் ஆட்சியாகவும், சமூக நீதியின் ஆட்சியாகவும், நீதி நெறிமுறைகளுக்கு உட்பட்ட ஆட்சியாகவும் இருப்பதாக பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், நீதித்துறையின் கோரிக்கைகள் எவ்வித தாமதமும் இல்லாமல் உடனுக்குடன் தமிழகத்தில் நிறைவேற்றித் தரப்படுவதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications