அரசு அதிகாரிகளுடன் இணைந்து... திமுகவினர் நிவாரணப் பணிகளில் ஈடுபடவும் -முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: மழை வெள்ள பாதிப்புகளால் மக்கள் படும் இன்னல்களை போக்கிடும் வகையில் திமுகவினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சர்களை போல் திமுக எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் மீட்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள வேண்டுகோளில்,

நிவாரணப் பணிகள்
''வடகிழக்குப் பருவமழையையொட்டி முன்கூட்டியே ஆலோசனைக் கூட்டம் நடத்தி அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நான் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறேன். மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும் இதுபோன்ற நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.''

இன்னல் போக்கவும்
''இந்நிலையில் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து கழக நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அளித்தல், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி - மக்களின் இன்னல்களைப் போக்கிட தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.''

முன்னுதாரணம்
திமுகவினருக்கு இந்த வேண்டுகோளை விடுப்பதற்கு முன்னர் முன்னுதாரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையின் பல்வேறு இடங்களில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கும் சூழலில், அதில் இறங்கி நின்று தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேருவும், சேகர்பாபுவும் உடன் இருக்கிறார்கள்.

தன்னார்வலவர்கள்
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை சார்பில் மீட்பு பணிகளில் தன்னார்வலர்கள் களம் இறக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இதனிடையே தமிழகத்தில் அடுத்து 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்பதால், அனைத்து மாவட்ட நிர்வாகமும் நிவாரணப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications