Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஸ்வகர்மா திட்டம் vs கலைஞர் கைவினை திட்டம்.. என்ன வித்தியாசம்? விளக்கமாக சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பாஜக அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கும் தமிழக அரசின் கலைஞர் கைவினைத் திட்டத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கிப் பேசி இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

CM Stalin Explains Difference Between BJP s Vishwakarma Scheme and TN s Kalaignar Kaivinai Thittam

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்துக் கைவினை கலைஞர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக, இன்று நாம் தொடங்கி வைக்க இருக்கக்கூடிய இந்த கலைஞர் கைவினைத் திட்டம் என்பது, சமூகநீதியை - சமநீதியை - மனிதநீதியை - மனித உரிமை நீதியை நிலைநாட்டக்கூடிய திட்டம்.

இந்த திட்டத்தின் சிறப்புகளை சொல்வதற்கு முன்னே, ஏன் இந்த திட்டத்தை உருவாக்கினோம் என்ற அரசியல் பின்னணியை நான் சொல்ல விரும்புகிறேன்.

விஸ்வகர்மா திட்டம்

மத்தியில் ஆளக்கூடிய பா.ஜ.க அரசு கடந்த 2023-ஆம் ஆண்டு ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதன் பெயர் என்ன தெரியுமா? "விஸ்வகர்மா திட்டம்!" 18 வகையான கைவினைக் கலைஞர்களுக்கு, திறன் பயிற்சி வழங்கி, மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டம் என்று சொன்னார்கள். நம்மை பொறுத்தவரைக்கும், எந்தத் திட்டமாக இருந்தாலும், அது சமூக நீதியை, சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற நோக்கத்துடன் இருக்க வேண்டும்.

ஆனால், அந்த விஸ்வகர்மா திட்டம் - அப்படியான திட்டம் இல்லை. அதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்தத் திட்டத்தின் கீழ் ஒருவர் பயன்பெற வேண்டும் என்றால், அந்த விண்ணப்பதாரர், அவருடைய குடும்பம் காலங்காலமாக செய்து கொண்டு வருகின்ற தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. இது சாதிய பாகுபாடுகளை, குலத்தொழில் முறையை வெளிப்படையாகவே ஊக்குவிக்கிறது என்று சொல்லி நாம் கடுமையாக எதிர்த்தோம்.

அதுமட்டுமல்ல, விண்ணப்பித்தவர்களுக்கான குறைந்தபட்ச வயது 18 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை பார்த்து எனக்கு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் உண்டானது. 18 வயது என்பது ஒரு மாணவர் உயர்கல்விக்காக கல்லூரிக்குச் செல்கின்ற வயதா, இல்லை, குடும்பத் தொழிலையே செய்யவேண்டும் என்று தள்ளிவிடுகின்ற வயதா? படிப்பை விட்டு வெளியே செல்கின்ற மாணவர்களையும் மீண்டும் கல்வி சாலைக்குள்ளே அழைத்துக் கொண்டு வருவதுதான் ஒரு அரசின் கடமையே தவிர, அவர்களை படிப்பை விட்டு வெளியேற்றுவதும், அதுவும் குடும்பத் தொழிலையே செய்யவேண்டும் என்று சொல்வதும் கிடையாது.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்கள் மூலமாக ஸ்கூல் முடித்த எல்லோரும் உயர்கல்விக்கு போவதை உறுதி செய்ய வேண்டும் என்று நாம் பாடுபடுகிறோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு குலத் தொழிலை ஊக்குவிக்க பாடுபடுகிறது. நாம், "நான் முதல்வன்" திட்டத்தில், எதிர்கால உலகத்தை எதிர்கொள்ளத் தேவையான திறன் பயிற்சிகளை கொடுத்து, நம்முடைய குழந்தைகள் பெரிய, பெரிய நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் வேலை செய்யவேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், பா.ஜ.க என்ன நினைக்கிறது? குடும்பத் தொழிலில் பயிற்சி கொடுத்து, அவர்கள் வெளி உலகத்தையே பார்க்க கூடாது என்று நினைக்கிறது.

அதுவும், சாதிய வேறுபாடுகள் நிறைந்த இந்திய சமூகத்தில், இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? இதை மனசாட்சி உள்ள ஒருவர் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? அதுவும், 1950-களிலேயே குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துக் களம் கண்ட தமிழ்நாடு இதை அனுமதிக்குமா? அந்த உணர்வோடுதான், தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த, மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதினேன். அதில் நான் குறிப்பிட்டது.

முதல் மாற்றம்

விண்ணப்பதாரரின் குடும்பம் பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்கின்ற கட்டாய நிபந்தனையை நீக்கி, தகுதியான எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று மாற்றவேண்டும்!

இரண்டாவது மாற்றம்

விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18-லிருந்து 35-ஆக உயர்த்தவேண்டும்!

மூன்றாவது மாற்றம்

கிராமப்புறங்களில், பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்பை கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் இருந்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாற்றவேண்டும்!

ஆனால், மிக மிக முக்கியமான இந்த மூன்று மாறுதல்களையும் ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். எந்த திருத்தமும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால்தான், பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவத்தில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்று ஒன்றியத்தில் இருக்கக்கூடிய MSME துறையின் அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாகவே இதை நாங்கள் தெரிவித்துவிட்டோம்.

அதே நேரத்தில், கைவினைக் கலைஞர்களுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்காக, சாதிய அடிப்படையில், பாகுபாடு காட்டாத ஒரு திட்டத்தை உருவாக்க நாங்கள் முடிவு செய்தோம். அதன்படி உருவானதுதான் இந்த கலைஞர் கைவினைத் திட்டம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

என்ன வித்தியாசம்?

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில், 18 தொழில்கள்தான் இருக்கிறது! ஆனால், நம்முடைய கலைஞர் கைவினைத் திட்டத்தில் 25 வகையான தொழில்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசுத் திட்டத்தில், விண்ணப்பதாரர் அவருடைய குடும்பத் தொழிலை மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால், நம்முடைய திட்டத்தில் விரும்பிய எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

கலைஞர் கைவினைத் திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 35-ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறோம். அதனால், கல்லூரிக்கு செல்கின்ற வயதில், குடும்பத் தொழிலை பார்த்தால் போதும் என்று எந்த மாணவரும் நினைக்காமல் இருப்பதை உறுதி செய்திருக்கிறோம்.

இந்தத் திட்டத்தில், 50 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. விஸ்கர்மா திட்டத்தில் மானியம் கிடையாது. இதுவரை 24 ஆயிரத்து 907 விண்ணப்பங்கள் வந்திருக்கிறது.

வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 8 ஆயிரத்து 951 பயனாளிகளுக்கு 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது!

சமூக பாகுபாடு இல்லாமல்

கலைஞர் கைவினைத் திட்டமானது தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து வகை கைவினைக் கலைஞர்களுக்கும் அதிகாரம் அளிக்கின்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. யாரையும் விலக்காமல், சமூகப் பாகுபாடு பார்க்காமல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆர்வமான கைவினைஞர்கள், விரும்பிய தொழிலைச் செய்யலாம் என்கின்ற அடிப்படையில்தான் இந்தத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.

ஒரு காலத்தில், அப்பா பார்த்த தொழிலைத்தான் பிள்ளையும் பார்க்கவேண்டும் என்று குலத்தொழில் முறை இருந்தது. அந்த அடிப்படையில், தொடக்கத்திலேயே நான் சொன்னது போல, அப்பா தொழிலை மகனுக்குக் கற்றுத் தர குலக்கல்வி முறையை இராஜாஜி ஆட்சிக் காலத்தில் உருவாக்கினார்கள். இதற்கு எதிராக தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் போராடினார்கள். பெருந்தலைவர் காமராசர் அவர்கள்தான் அந்த முறையை திரும்பப் பெற்றார். இத்தனை ஆண்டுகள் ஆகியும், சிலருடைய மனதிலிருந்து அந்த பழமைவாத எண்ணம் இன்னும் போகவில்லை என்பதன் அடையாளம்தான் விஸ்வகர்மா திட்டம்.

சமூக நீதி திட்டம்

அதை எதிர்த்து நம்முடைய திராவிட மாடல் அரசு சமூகநீதித் திட்டமாக, கலைஞர் கைவினைத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இதுதான் காலத்தின் வெற்றி. இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி.

போராடும் இடத்தில் இருந்து, நாம் மாற்றுத் திட்டத்தை உருவாக்குகின்ற வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். இது ஒரு கட்சியின் ஆட்சியல்ல, ஒரு கொள்கையின் ஆட்சி என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன். அந்த அடிப்படையில்தான் இதுபோன்ற திட்டங்களைத் தீட்டுகிறோம்.

தமிழ்நாடு இன்றைக்கு மாபெரும் வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்று சொன்னால், பெரிய நிறுவனங்களால் மட்டுமே இந்த வளர்ச்சி வந்துவிடவில்லை. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களாலும்தான் இந்த வளர்ச்சியை நாம் சாத்தியமாக்கி இருக்கிறோம். இந்தத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள நம்முடைய அருமை சகோதரர் மாண்புமிகு தா.மோ. அன்பரசன் அவர்கள் இந்தத் துறையை சிறப்பாக வளர்த்தெடுத்துக் கொண்டு வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு MSME நிறுவனங்களை அவர் வளர்த்தெடுத்திருக்கிறார். அவை பெருந்தொழில்களுக்கு துணையாக இருந்து நாட்டின் 'இன்க்ளூசிவ்' மற்றும் 'ஆல்-ரவுண்ட்' சமூக வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிக்கிறது. உள்ளூர் வளங்களை பயன்படுத்தி அந்தப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதால், மக்கள் வேலை தேடி தொலைதூரங்களுக்கு இடம் பெயர்வது பெருமளவு தடுக்கப்படுகிறது.

MSME தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில், தமிழ்நாடு இந்தியாவிலேயே 3-ஆவது இடத்தை வகித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில், சுமார் 33 இலட்சம் MSME தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த எண்ணிக்கையில் இது எவ்வளவு தெரியுமா? 9.4 விழுக்காடு.

நிதியுதவி பெறலாம்

அனைத்து மாவட்டங்களிலும், தொழில் முயற்சிகளை பரவலாக நாம் தொடங்கி வருகிறோம். அந்த வகையில்தான் கலைஞர் கைவினைத் திட்டமும் முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்டிருக்கிறது.

கைவினைக் கலைஞர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்து அவர்கள் வளர்ச்சிக்காக, 'தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் மேம்பாட்டு நிறுவனம் - பூம்புகார் நிறுவனத்தை முதலமைச்சராக இருந்த கருணாநிதி 1973-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். 2025-ல் அவர் பெயரில் கலைஞர் கைவினைத் திட்டத்தை உங்களில் ஒருவனாக இருக்கக்கூடிய நான் இன்றைக்கு தொடங்கி வைக்கிறேன்.

நேற்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று, 60 ஆயிரம் பேருக்கு மேல் பட்டா வழங்கினேன். சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு சட்டமன்றத்தில், அறிமுகம் செய்யப்பட்ட சட்டத்தின் மூலமாக, சுமார் 15 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில், தேர்தலே இல்லாமல் உறுப்பினர்களாகப் போகிறார்கள். இது போன்ற திட்டங்கள் மூலமாகதான் ஒரு முதலமைச்சராக நான் மனநிறைவை அடைந்து கொண்டிருக்கிறேன்.

கலைஞர் கைவினைத் திட்டத்தில் சேர்ந்து, நிதியுதவி பெற்று தொழில் தொடங்கும் பயனாளிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!

ஏதோ தொழில் தொடங்கினோம் - வாழ்க்கையை நடத்தினோம் என்று இல்லாமல், நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்ற அளவுக்கு நீங்கள் உயரவேண்டும் என்று மன நிறைவோடு உங்களை நான் வாழ்த்துகிறேன்!" எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+