கரூரில் 39 பேர் உடல்கள் ஒரே நாளில் உடற்கூராய்வு செய்யப்பட்டது ஏன்? முதல்வர் ஸ்டாலின் அளித்த விளக்கம்
சென்னை: ஒரே நாளில் 39 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி.? உடற்கூராய்வு செய்வதில் அவசரம் காட்டப்பட்டது ஏன்?" என்ற விமர்சனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பதில் அளித்தார். கரூர் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் இறந்த அனைத்து உடல்களையும் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் அன்று இரவே உடற்கூராய்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதி பெற்று உடற்கூராய்வு செய்யப்பட்டது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்தார். கரூரில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் அன்றைய தினம், வெளிமாவட்டங்களையும் சேர்த்து 601 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தவெக தலைவர் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே, கூட்ட நெரிசலுக்கு பிரதான காரணம் என்று முதலமைச்சர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், காவல்துறையின் அறிவுரைகளை மீறி அக்ஷயா மருத்துவமனையில் இருந்து தவெகவின் வாகனம் 30 முதல் 35 மீட்டர் சென்ற போது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
அனைத்து உயிரிழந்தவர்களின் உடல்களும் ஏன் அன்றே உடற்கூராய்வு செய்யப்பட்டது என்பது தொடர்பாகவும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துப் பேசினார். ஒரே நாளில் 39 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி? உடற்கூராய்வு செய்வதில் அவசரம் காட்டப்பட்டது ஏன்?" என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41. இதில் ஆண்கள் 13, பெண்கள் 18, குழந்தைகள் 10 பேர். கரூர் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் இறந்த அனைத்து உடல்களையும் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் அன்று இரவே உடற்கூராய்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதி பெற்று உடற்கூராய்வு செய்யப்பட்டது.
உடனடியாக உடற்கூராய்வு நடைமுறைகளை முடித்து பாதிக்கப்பட்ட துக்கத்தில் இருக்கக்கூடிய குடும்பங்களிடம் உடல்களை ஒப்படைக்க வேண்டி, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி தடவயியல் துறை தலைவர் சங்கர் தலைமையில் 24 மருத்துவர்கள், 14 உதவி பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது. 28 ஆம் தேதி அதிகாலை 1.41 மணிக்கு முதல் உடற்கூராய்வு தொடங்கி அன்று மதியம் 1.10 மணி அளவில் 39 உடலின் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.
காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் 200-க்கும் அதிகமான காவல்கர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் குழுமியிருந்த மக்களை ஒழுங்குப்படுத்தி எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது. மேலும் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என அரசு நிவாரண நிதியில் இருந்து சுமார் 4 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டு உள்ளது." எனத் தெரிவித்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கரூர் அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே 2 உடற்கூராய்வு மேஜைகள் இருந்தன. கூடுதலாக 3 மேஜைகள் அமைக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது. மேலும், அவசர நிலையைக் கருதி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றே நள்ளிரவில் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. அடுத்த நாள் மதியம் வரை 39 உடல்களுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது. 14 மணி நேரம் உடற்கூராய்வு நடந்தது. கூடுதலாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, மொத்த 25 மருத்துவர்கள் உடற்கூராய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்" என விளக்கமளித்தார்.
கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் உடல்கள் அவசரம் அவசரமாக உடற்கூராய்வு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு விமசனங்கள் வைக்கப்பட்ட நிலையில் உடல்களை வைக்க போதிய இடம் இல்லாததால் உடனடியாக உடற்கூராய்வு செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் இன்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications