சென்னையில் நோ பொல்யூஷன்! 120 மின்சார பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த ஸ்டாலின்
சென்னை: சென்னையில் முதற்கட்டமாக 120 தாழ்தள மின்சார பேருந்துகளை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் சென்னை வியாசர்பாடியில் ரூ 47.50 கோடியில் பணிமனையையும் திறந்து வைத்தார். அவருடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இருந்தார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகமானது எரிபொருள் செலவை குறைப்பதற்காகவும் சென்னையில் காற்று மாசுவை கணிசமாக கட்டுப்படுத்துவதற்காகவும் கூடுதல் வசதி கொண்ட தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்தது.

அதன்படி உலக வங்கியுடன் மொத்த விலை ஒப்பந்தத்தின்படி 1225 மின்சார தாழ்தள பஸ்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. அதில் முதல்கட்டமாக 625 மின்சார பஸ்களுக்கான ஒப்பந்தமானது அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓம் குளோபல் மொபிலிட்டி நிறுவனத்துடன் போடப்பட்டது.
இதில் 400 பஸ்களை ஏசி அல்லாத பஸ்களும் 225 ஏசி பஸ்களும் அடங்கும். இந்த மின்சார பஸ்களை இயக்குவது மற்றும் பராமரிப்பது ஓம் குளோபல் நிறுவனம் ஆகும். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கண்டக்டர்கள் பணியமர்த்தப்ப்டடு டிக்கெட் விற்பனை மேற்கொள்ளப்படும்.
இதில் 625 பேருந்துகளில் முதல் கட்டமாக 120 மின்சார பேருந்துகளை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை வியாசர்பாடி பணிமனையில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். மேலும் ரூ 47.50 கோடியில் பணிமனையும் திறக்கப்பட்டது.
இந்த மின்சார பேருந்தில் ஆட்டோ கியர் சிஸ்டம் இருப்பதால் கிளட்சை மிதிக்க தேவையில்லை. டீசல், சிஎன்ஜி போன்று அதிக வெப்பத்தையும் உமிழாது. பேருந்துகளில் பாதுகாப்பு கருதி 7 சிசிடிவி கேரமாக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ஏறி இறங்கும் வகையில் இந்த பேருந்து அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த பஸ் நிறுத்தம் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படும். இருக்கையின் கீழ் செல்போன் சார்ஜ் போடும் பாயிண்ட்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் எல்இடி லைட்டுகள், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட வசதிகள் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications