தொழில் முதலீடுகளுக்கு உலக நாடுகள் தமிழ்நாட்டை தான் நம்புகின்றன.. பெருமை பொங்கப் பேசிய ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் மீதும், சென்னை மீதும், தமிழக இளைஞர்கள் மீதும், உலக நிறுவனங்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளன. தொழில் துறையில் தமிழ்நாடு நம்பர் 1 ஆக வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 16-வது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

CM Stalin Global Companies Trust Tamil Nadu Aim Is to Make State No 1 in Industry

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இந்த விழாவில் பங்கெடுப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். அது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், அதை நவீனப்படுத்தவும் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கும் அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பை நான் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!

உலக நிறுவனங்கள் தமிழ்நாட்டின் மீது நம்பிக்கை

உலகளவில் கண்காட்சிகளுக்கு தலைமை வகிக்கக்கூடிய பிரான்ஸ் நாட்டில் இருக்கும் UFI கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ACMEE கண்காட்சிகள் நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளை குறைந்த விலையில் ஒப்பிட்டு பார்க்கவும், முதலீட்டாளர்களை சந்திக்கவும், இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் கூட்டு திட்டங்கள் தொடங்கவும், அதற்கு உடனடி கடன் வசதிகள் பெறவும் உதவி செய்யும். அதனால்தான், கடந்த ஆண்டு 435 நிறுவனங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், இப்போது 468 நிறுவனங்கள் பங்கெடுத்திருக்கிறது! இதை, தமிழ்நாட்டின் மீதும், சென்னை மீதும், தமிழ்நாட்டு இளைஞர்கள் மீதும், உலக நிறுவனங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடாக நான் பார்க்கிறேன்.

இந்த கண்காட்சியால், தமிழ்நாடு வளரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது! நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது! தொழில் வளர்ச்சிக்கும் - தொழிலாளர் நலனுக்கும் நாம் செய்திருக்கக்கூடிய முக்கியமான பணிகளை சொல்ல வேண்டும் என்றால், 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட M.S.M.E-க்களில் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நம்முடைய தமிழ்நாட்டில் இந்த நிறுவனங்கள் மூலமாக 2 கோடியே 47 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது!

14 புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கியிருக்கிறோம்! இன்னும் உருவாக்கவும் போகிறோம்!

கிண்டியிலும் - அம்பத்தூரிலும் அடுக்குமாடி தொழிற்கூட வளாகங்கள்

சேலத்தில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி வளாகம்

கோவையில் பணியாளர்கள் தங்குவதற்கான விடுதி

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் தங்குவதற்கான விடுதி அமைக்கப்பட்டிருக்கிறது!

கோவையில் தங்கநகை பூங்கா

திண்டிவனத்தில் மருந்தியல் பொருட்களுக்கான பெரும் குழுமம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது!

தொழில் முனைவோர்களின் நீண்டநாள் கோரிக்கையான தொழில் மனைக்கான பட்டா பெறும் வகையில், நில வகைப்பாட்டினை மாற்றுவதற்கு அதிகாரம் பெற்ற குழு அமைக்கப்பட்டு, தற்போது வரை 6 ஆயிரத்து 492 ஒதுக்கீட்டாளர்களுக்கு, தடையின்மை சான்று வழங்கப்பட்டு 2 ஆயிரத்து 688 நபர்கள் பட்டா பெற்றிருக்கிறார்கள்!

இதேபோல, நம்முடைய அரசின் உழைப்பால், தொழில்துறையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் முன்னேற்றங்களில் சிலவற்றை சொல்ல வேண்டும் என்றால்,

இந்தியாவின் உற்பத்திதுறை சார்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு - 11.90 விழுக்காடு!

மோட்டார் வாகன உற்பத்தி, ஆயத்த ஆடைகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்!

ஜவுளி, இயந்திரங்கள் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தியில், இரண்டாவது இடம்!

இந்திய அளவில், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் உற்பத்தியில் 17.66 விழுக்காட்டோடு இரண்டாம் இடம்!

தமிழ்நாட்டில் தொழில்முனைவோரில் பெண்களின் பங்கு 30 விழுக்காடு!

பெண் தொழிலாளர்கள்

இன்னும் பெருமையோடு சொல்கிறேன் - இந்தியாவில் இருக்கும் 14 லட்சத்து 90 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட பெண் தொழிலாளர்களில் 6 லட்சத்து 30 ஆயிரம் பேர், அதாவது 42 விழுக்காடு பெண்கள், நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகளில்தான் பணிபுரிகிறார்கள்!

2024-25-ஆம் ஆண்டில், 30.50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்த இந்திய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறோம்!

ஏற்றுமதியில் முதல் நான்கு மாநிலங்களில், 2021-22-ஆம் ஆண்டில் இருந்து, தொடர்ந்து ஏற்றுமதி மதிப்பு அதிகரித்து வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்!

தொழில் வளர்ச்சிக்கும் - தொழில் துறையினருக்கும் - தொழிலாளர்களின் நலனுக்கும் என்னவெல்லாம் தேவை என்று உன்னிப்பாக கவனித்து செயல்படுவதால்தான், இதெல்லாம் சாத்தியமானது!

பல்வேறு சுய வேலைவாய்ப்புத் திட்டங்களின்கீழ் கடந்த நான்காண்டுகளில் 59 ஆயிரத்து 915 புதிய தொழில் முனைவோருக்கு 2 ஆயிரத்து 31 கோடி ரூபாய் மானியத்துடன் 5 ஆயிரத்து 209 கோடியே 51 இலட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றாலே தொழில் வளர்ச்சிதான்! அதிலும் M.S.M.E-க்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம்... அதனால்தான், நாட்டிலேயே முதன்முதலாக 2008-ஆம் ஆண்டிலேயே, M.S.M.E-க்கு என்று தனிப்பட்ட பாலிசியை வெளியிட்டோம்!

அதேபோல் கடந்த நான்காண்டுகளில் முதலீட்டு மானியம், மின் மானியம், ஊதியப் பட்டியல் மானியம், பின் முனை வட்டி மானியம் என்று பல்வேறு இனங்களில், 19 ஆயிரத்து 931 M.S.M.E நிறுவனங்களுக்கு ஆயிரத்து 381 கோடியே 91 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கியிருக்கிறோம்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பை உருவாக்குவதில், வேளாண்மைக்கு அடுத்த இடத்தில் M.S.M.E-க்கள்தான் இருக்கிறது! எனவே, இந்த நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து பெற்றுத்தர தமிழ்நாடு அரசு தொடர்ந்து உழைத்துக் கொண்டு வருகிறது. சென்னை மற்றும் மதுரை வசதியாக்கல் குழுக்களை இரண்டாக பிரித்து, புதிதாக வேலூர் மற்றும் தூத்துக்குடி வசதியாக்கல் குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக 794 M.S.M.E-க்களுக்கு வரவேண்டிய 127 கோடியே மூன்று இலட்சம் ரூபாய் நிலுவைத்தொகை பெற்றுத் தரப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே, தமிழ்நாட்டுக்கென குறிப்பான கடன் உத்தரவாத திட்டத்தை 2022-ல் நான் தொடங்கி வைத்தேன். அதன் மூலமாக இதுவரைக்கும் 42 ஆயிரத்து 278 M.S.M.E-க்களுக்கு 7 ஆயிரத்து 578 கோடியே 53 இலட்சம் ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டிருக்கிறது!

இந்த தொழில் நிறுவனங்களுக்கு முக்கியமான தேவை மின்சாரம்தான்! தமிழ்நாடு மின்சாரத் துறையால் இப்போது வசூல் செய்யப்படும் தொகையான ஒரு யூனிட்டுக்கு 7 ரூபாய் 65 பைசா என்பது சராசரி விற்பனை அடக்கவிலையை விட குறைவு! பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் அனைத்துவகை நுகர்வோருக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மிகக்குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குகிறது.

இருந்தாலும், M.S.M.E நுகர்வோர்களின் கோரிக்கைகளை ஏற்று, குறைந்த அழுத்த தொழிற்சாலைகளுக்கான உச்சநேர நுகர்வுக்கான மின் கட்டணத்தை 25 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாக குறைத்தோம்! இதற்காக 607 கோடியே 63 லட்சம் ரூபாய் கூடுதல் மானியமாக வழங்கியிருப்பதை இந்த தருணத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன். இதற்காக நடப்பு நிதியாண்டில் 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறோம்!

அது மட்டுமல்ல, தென்னை நார் தொழில் கொள்கை - தமிழ்நாடு உணவுப் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் - StartUp நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை என்று அனைத்துத் தொழில்களையும் கவனம் செலுத்தி முன்மாதிரி முயற்சிகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் M.S.M.E-க்களின் பங்களிப்பை கருத்தில் கொண்டு, இந்த நிதியாண்டில் இந்தத் துறைக்கு ஆயிரத்து 918 கோடியே 22 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

அதிமுக ஆட்சியில்

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், கடந்த அதிமுக ஆட்சியில் பத்தாண்டுகளில், 3 ஆயிரத்து 617 கோடியே 62 லட்சம் ரூபாய்தான் ஒதுக்கினார்கள். ஆனால், நம்முடைய அரசில், அதைவிட இரண்டு மடங்காக இப்போது வரைக்கும் 6 ஆயிரத்து 626 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியிருக்கிறோம்!

இங்கு தொழில்துறையினர் நிறைய பேர் வந்திருக்கிறீர்கள். இந்தக் கூட்டமைப்பின் தலைவர் தொடக்கத்தில் உரையாற்றியபோது ஒரு கோரிக்கை வைத்தார். நிச்சயம் அது பரிசீலிக்கப்படும். கோரிக்கை வைத்த அவருக்கு மட்டுமல்ல, அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கும் நானும் ஒரு கோரிக்கையை வைக்கின்றேன்.

இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தமிழ்நாட்டிற்கு நீங்கள் தொழிலில் முன்னேற்றம் காண வேண்டும்! தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் மாபெரும் பங்களிப்பை வழங்கி, தமிழ்நாட்டை இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக நிலைநிறுத்த வேண்டும். அதற்கு உங்களுக்கு துணையாக நம்முடைய திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கும்! இருக்கும்!" எனப் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+