இந்த ஆட்சியே காவல்துறையின் பொற்காலம்.. மக்களுக்கு போலீஸ் மேல் பயம் இருக்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிட மாடல் அரசின் காலம்தான் தமிழ்நாடு காவல்துறையின் பொற்காலம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரேங்க், சீனியாரிட்டி எல்லாம் பார்க்காமல் கடைநிலைக் காவலர்கள் வரை ஃப்ரெண்ட்லியாக பணியாற்ற வேண்டும் என போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

3,359 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை இன்று வழங்கினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3,359 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 1000 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

mk stalin police chennai

மீதமுள்ள 2359 நபர்களும், அவர்கள் சார்ந்த மாவட்டங்களிலுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் / மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களில் இருந்தபடியே காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியை பார்வையிட்டு, மாவட்டங்கள், சரகங்கள் மற்றும் மாநகரங்களில் உள்ள அந்தந்த காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் மூலமாக நேரடியாக பணி நியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "காவல்துறையினர் என்றால் யார் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதை சொல்லி, உங்களை வரவேற்க விரும்புகிறேன். தங்களால் உருவாக்கப்படாத பிரச்சினைகளுக்கு, தீர்வு காண வேண்டியவர்கள்!

முரண்பாடு ஏற்படும் இடங்களில், முதல் ஆளாக நிற்க வேண்டியவர்கள்! எல்லா விதங்களிலும் சகிப்புத்தன்மையுடன் நடக்க வேண்டியவர்கள்! உள்ளக் கொந்தளிப்பு அடையாமல் பற்றற்ற அமைதியுடன், நடந்துகொள்ள வேண்டியவர்கள்! பெற்ற சிறந்த பயிற்சிக்கு ஏற்ப கடமையுணர்ச்சி மிக்கவர்களாக, இருக்க வேண்டியவர்கள்! இப்படி இன்ப, துன்பங்களைத் துறந்து, ஊண், உறக்கம் மறந்து, கடமை - கண்ணியம் - கட்டுப்பாடோடு பணியாற்ற வந்திருக்கக்கூடிய காவலர்கள் அனைவரையும் வருக, வருக என நான் வரவேற்கிறேன்.

165 ஆண்டுகள் பழமையும், பெருமையும் மிக்க தமிழ்நாடு காவல்துறையில், நீங்கள் எல்லோரும் அடியெடுத்து வைக்கிறீர்கள். அதற்காக முதலில் என்னுடைய வாழ்த்துகள்! நம்முடைய திராவிட மாடல் அரசை பொறுத்தவரைக்கும், காவலர்களை போற்றும் அரசாக, காவல்துறையில் இருப்பவர்களுக்கு பல நலத்திட்டங்களை நிறைவேற்றித் தரும் அரசாக, நேர்மையாக, திறமையாக செயல்பட்டு மக்களைக் காப்பாற்றும், காவல்துறையினருக்கு பக்கபலமாக இருக்கும் அரசாக அமைந்திருக்கிறது.

அதனால்தான், இந்தியாவிலேயே ஏன், உலக அளவிலேயே ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறையாக, தமிழ்நாடு காவல்துறை விளங்கிக் கொண்டிருக்கிறது! அதை யாரும் மறுக்கமுடியாது.

அதன் அடையாளமாகதான் சமீபத்தில் 'குடியரசுத் தலைவர் கொடி அங்கீகாரம் - காவல் பதக்கம் - 75-ஆவது ஆண்டு விடுதலை நாள் விழா பதக்கம் - தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் இணைந்து பணியாற்றுவது பொன்விழா கொண்டாட்ட பதக்கம் என்று வழங்கி, தமிழ்நாடு காவல்துறையில் செயல்படும் அனைவரையும் பாராட்டியிருக்கிறோம்! ஊக்கப்படுத்தி இருக்கிறோம்! இன்னும் சொல்லவேண்டும் என்றால், காவல்துறையை மேம்படுத்துவதற்காக காவலர்களுக்கான வசதிகளை ஏற்பாடு செய்துதரவும் முதன்முதலாக காவல் ஆணையம் அமைத்ததுடன், அதிகமான எண்ணிக்கையில் காவல் ஆணையங்களை அமைத்து, பல்வேறு முன்னோடி நலத்திட்டங்களை நிறைவேற்றியது திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்.

கடந்த மூன்று ஆண்டுகளில் காவலர்கள் முதல் டி.எஸ்.பி., வரை 17 ஆயிரத்து 435 நபர்களை காவல்துறையிலும், ஆயிரத்து 252 பேரை தீயணைப்புத் துறையிலும், 366 பேரை சிறைத் துறையிலும் புதிதாக நியமித்திருக்கிறோம்! அவர்களும் பாராட்டும் வகையில், சிறப்பாக பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள்.

மக்களை காக்க வரும் காவல்துறையினரை காக்கும், நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டங்கள் சிலவற்றை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் தலைமைக் காவலர் வரையிலான ஆளிநர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை, காவல் உதவி ஆய்வாளர்களுக்கு, 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை, இடர்ப்படி ஆயிரம் ரூபாயாக உயர்வு, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு பணியாற்றும் மாநில நுண்ணறிவுப்பிரிவு, குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை, பொருளாதாரக் குற்றப்பிரிவு, கடலோரக் காவல்படை, இரயில்வே காவல் படை, காவலர் பயிற்சிப் பள்ளி, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகரங்களில் பணிபுரியும் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை மாதந்தோறும் உணவுப்படி, காவலர்களின் வாழ்க்கைத் துணைவியருக்கும் மருத்துவப் பரிசோதனை, இரவு ரோந்து பணிக்கு செல்லும் அதிகாரிகளுக்கு சிறப்பு படி, காப்பீட்டுத் தொகை இரண்டு மடங்காக உயர்வு, மன அழுத்தம் போக்க 'மகிழ்ச்சி' திட்டம், பெண் காவலர்கள் வேலை மற்றும் வாழ்க்கை ஆகியவற்றில் சமநிலை பேண பயிற்சியளிக்கும் 'ஆனந்தம்' என்கின்ற திட்டம், காவலர் ஆளிநர்கள் மேல் நிலுவையில் இருந்த இரண்டாயிரத்து 249 சிறு தண்டனைகள் ரத்து, இவைகள் எல்லாம் காவல்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னுடைய கவனத்திற்கு வந்த உடனே, அவர்களின் நலனுக்காக நம்முடைய அரசு செய்தது!

இப்படி, திராவிட மாடல் அரசின் காலம்தான், தமிழ்நாடு காவல்துறையின் பொற்காலமாக அமைந்திருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்!

இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் தான் நீங்கள் இந்தப் படையில் இணைந்திருக்கிறீர்கள்! காவல்துறையைப் பொறுத்தவரை பொதுமக்களிடம் நெருக்கமாக இருக்கும் ஒரு துறை! அப்படிப்பட்ட துறையில் பணியாற்றவேண்டும் என்று நீங்கள் வந்திருக்கிறீர்கள். இந்த இடம் உங்களுக்கு சுலபமாக கிடைத்துவிடவில்லை.

போலீஸ் ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் அதற்காக படித்து, கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, தேர்வுகள் எழுதி, அதில் வெற்றி பெற்று, பல இலட்சம் பேர்களிலிருந்து, நீங்கள் மூன்றாயிரத்து 359 பேர், இன்றைக்கு இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள்.

இதற்காக நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள் என்று எனக்கு தெரியும்! அப்படிப்பட்ட உங்களுக்கும், உங்களுடைய இந்த வெற்றிக்கு துணை நின்ற குடும்பத்தினருக்கும் என்னுடைய வாழ்த்துகளை மனமார தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது, கஷ்டப்பட்டு வந்திருக்கும் நீங்கள் மக்களுடைய கஷ்டங்களை தீர்க்க பாடுபடவேண்டும்! புதிதாக தமிழ்நாடு காவல்துறையில் இணைந்திருக்கும், உங்களுக்கு ஏராளமான கடமைகள் காத்திருக்கிறது.

Law and Order-யை பாதுகாப்பதுடன் குற்றங்களே நடைபெறாமல் தடுப்பது தான் நம்முடைய இலக்காக இருக்கவேண்டும் என்று தொடர்ந்து நான் சொல்லிக்கொண்டு வருகிறேன். நமக்கு முன்னால் இருக்கும் முக்கியமான சவால்கள் என்ன என்றால், சைபர் குற்றங்கள், போதைப் பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்!

இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்! இந்தச் சமூகக் குற்றங்களை களைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு சமூக நோய்கள் உங்களை தாக்காமல் தற்காத்துக் கொள்வதும் முக்கியம்!

உங்களுக்கு, சமூகநீதிப் பார்வையும் மதச்சார்பின்மையும் நிச்சயம் முக்கியம்! சாதி பாகுபாடு பார்க்கக் கூடாது! அனைவருக்கும் பொதுவான நிலையில் இருந்து நீங்கள் பணியாற்றவேண்டும்! உங்களுக்கு சட்டம்தான் முக்கியம்! பிரச்சினை என்று உங்களிடம் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசுங்கள். உங்களின் பேச்சும், நீங்கள் நடந்துக்கொள்வதிலும் தான், நம்முடைய பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு உருவாக்கும்!

உங்களுக்கு தெரியும். ஒரு மாநிலம் பாதுகாப்பானதாக இருந்தால் தான், தொழிற்சாலைகள் வரும். தொழில்கள் வந்தால் தான், வேலைவாய்ப்புகள் உருவாகும். வேலைவாய்ப்பு கிடைத்தால்தான், தங்களின் தேவைகள் நிறைவேறி மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்! மக்களின் அந்த நிம்மதியை உறுதிப்படுத்த வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு உங்களிடம்தான் இருக்கிறது. அதைத்தான் நம்முடைய திராவிட மாடல் அரசும், இங்கு வந்திருக்கும் சங்கர் ஜிவால் தலைமையிலான காவல்படையும் செய்துகொண்டு இருக்கிறது. அதற்கு நீங்களும் துணை நிற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இங்கே காவல்துறை உயர் அதிகாரிகள் வந்திருக்கிறீர்கள். உங்களிடம் நான் எதிர்பார்ப்பது, உங்களின் Rank Seniority இதெல்லாம் பார்க்காமல், கடைநிலை காவலர்கள் வரை Friendly-யாக இருக்க வேண்டும்! ஒரு குடும்பமாக அன்போடும் அரவணைப்போடும் இருக்க வேண்டும்! இவர்களுக்கு உங்கள் மேல் பயம் இருக்கக் கூடாது! மரியாதைதான் இருக்கவேண்டும்!

நிறைவாக, புதிதாக பணியில் சேரும் உங்களுக்கு, நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, குற்றங்கள் குறைந்துவிட்டது என்று சொல்வது சாதனை இல்லை; குற்றங்களே இல்லை என்று சொல்வதுதான் சாதனை! குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டோம் என்று சொல்லிக்கொள்வது சாதனை இல்லை; குற்றங்கள் நடைபெறாமல் தடுத்துவிட்டோம் என்று சொல்வதுதான் நம்முடைய சாதனையாக இருக்கவேண்டும்!

காக்கிச் சட்டையைப் போடும் இன்றைக்கு அதற்கான உறுதியை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்! நீங்கள் பணியாற்றும் பகுதியில், குற்றங்கள் அனைத்தும் முழுமையாக தடுக்கப்பட்டது என்பது தான், உங்கள் Track Record-ஆக இருக்கவேண்டும்! பொதுவாக ஒரு குற்றச்சாட்டை சொல்வார்கள். Duty-க்கு வரும் புதிதில்தான் Active-ஆக இருப்பார்கள். ஆனால், காலப்போக்கில் சோர்ந்துவிடுவார்கள் என்று சொல்வார்கள். இன்றைக்கு பணியில் சேரும்போது உங்களிடம் இருக்கும் மிடுக்கும், போலீஸ் என்ற கம்பீரமும், Retired ஆகும் வரைக்கும் இருக்கவேண்டும்!

உங்கள் பேரை சொன்னாலே தமிழ்நாடே பெருமைப்படவேண்டும்! Personal-ஆக உங்களுக்கு நான் ஒரு Advice தர விரும்புகிறேன். Duty-யை கவனிக்கும் அதே நேரத்தில், உங்கள் உடல் நலனையும், உள்ள நலனையும் தயவுசெய்து பார்த்துக்கொள்ளுங்கள்; குடும்பத்திற்காகவும் நேரம் செலவிடுங்கள். நவீன காலகட்டத்தில் ஏற்றதுபோல, தொழில்நுட்ப ரீதியாகவும் உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.

உங்களிடம் நான் எதிர்பார்ப்பது, இன்றைக்கு பணிநியமன ஆணைகள் வாங்கும் நீங்கள், எதிர்காலத்தில் என்னிடம் Award வாங்கவேண்டும். அப்போது, இன்றைக்கு Appointment Order பெற்றுக் கொண்டதை நினைவுகூர்ந்து சொன்னீர்கள் என்றால், அதுதான், எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக அமைந்திட முடியும்!" எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+