“திமிரெடுத்துப் பேசி இருக்கிறார் ஆளுநர் ரவி.. திமிரை அடக்க வேண்டும்" கொதித்தெழுந்த முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்துப் பேசி இருக்கிறார் ஆளுநர் ரவி. அவரது திமிரை நாம் அடக்க வேண்டும்" என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாகப் பேசியுள்ளார்.

"தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது. யாருடனும் இணையவில்லை. திராவிடம் என்பது கற்பனை, தமிழ்நாட்டில் பீகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர். இங்கு மொழி சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன" என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.

mk stalin rn ravi erode

இந்நிலையில், இன்று ஈரோட்டில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "ஆளுநர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு சேவையாற்ற அவர் வந்திருப்பதாக சொன்னதை கேட்டதுமே, சிரிப்புதான் வந்தது. தமிழ்நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினைகள் இருக்கிறதாம். தீவிரவாதப் போக்கு நிலவும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதாம். தமிழ்மொழி வளர்ச்சிக்காக இங்கே எதுவும் நடக்கவில்லையாம். எல்லோரும் ஆங்கிலம் படிக்கிறார்களாம். இப்படியெல்லாம் அவதூறு, ஆற்றாமை கலந்து புலம்பியிருக்கிறார் ஆளுநர்.

மத்திய பா.ஜ.க. ஆட்சியில்தான் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்து, சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் பலியானார்கள்? மத்திய பா.ஜ.க. ஆட்சியில் தான் டெல்லி செங்கோட்டை அருகில் குண்டுவெடிப்பு நடந்து அங்கே மக்கள் பல பேர் பலியானார்கள்? பா.ஜ.க ஆட்சியில்தான் மணிப்பூர் பற்றி இன்றைக்கு எரிந்து கொண்டிருக்கிறது?

தீவிரவாதத் தாக்குதல்களில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத பா.ஜ.க ஆட்சியை புகழ்ந்து பேசியிருக்கின்ற ஆளுநர் அவர்கள், அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார். அவருடைய திமிரை அடக்கவேண்டும்.

இக்கட்டான சூழல்களில் எல்லாம், தன்னுடைய தேசப்பற்றைக் காட்டி, நம்முடைய படை வீரர்களுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்குவது நம்முடைய தமிழ்நாடுதான்! அப்படிப்பட்ட தமிழர்களை தேச விரோதிகளாக சித்தரிக்கின்ற ஆளுநரின் பேச்சு என்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

பா.ஜ.கவுக்கு வாக்களிக்காதவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்பதுபோல பேசுகிறார். அவர் வகிக்கின்ற அரசியல் சாசனப் பொறுப்புக்குத் துளியும் பொருத்தமற்ற, தகுதியற்ற தரக்குறைவான பேச்சு இது!

எங்கள் பிள்ளைகள் உலக வாய்ப்புகளுக்காக ஆங்கிலம் படிக்கிறார்கள். அதில், உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்களுக்கு எங்கே எரிகிறது? இன்னும் டபுள் மடங்கு ஆர்வமாக நாங்கள் ஆங்கிலம் படிக்க தயாராக இருக்கிறோம்!

இந்தியா முழுவதும் இந்தி பேசாத மாநில மொழிகள் இன்றைக்கு உயிர்ப்யுடன் இருக்கும் என்றால், அதற்கு காரணமே தமிழ்நாடு உயிரைக் கொடுத்து மொழிப்போரில் ஈடுபட்டதுதான்! தாய்மொழிப் பற்று பற்றி தமிழ்நாட்டிற்கு நீங்கள் வகுப்பெடுக்க வேண்டாம்! அந்த பாடத்தில் பி.எச்.டி. வாங்கியவர்கள் நாங்கள்!

சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கலைஞர் பேரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்காக மசோதாவை நிறைவேற்றி அனுப்பி வைத்தால், அனுமதி கொடுக்காமல், மூன்று மாதம் கிடப்பில் வைத்து விட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். நான் கேட்கிறேன்... குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கின்ற அளவுக்கு, அதில் என்ன அரசியலமைப்புச் சட்ட பிரச்சினை இருக்கிறது? அவர் கிடப்பில் போட்டதை மறைக்க, குடியரசுத் தலைவர் மேல் பழியை போட்டு தப்பிக்க பார்க்கிறார்.

"கலைஞர்" பேர் வைக்கக் கூடாது என்று மாணவர்களின் நலனில் விளையாடுவது என்ன நியாயம்? மக்களாட்சியை மதித்து, இதற்கான உரிய அனுமதியை விரைவில் கொடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறேன். இல்லையென்றால், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரையே நேரில் சந்தித்து கோரிக்கை வைப்பார்கள். விரைவில் நாடாளுமன்றம் கூடவிருக்கிறது. அந்த நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள்! ஆனால், ஒன்று, ஆளுநர் ரவி அவர்களே, நீங்கள் இப்படிதான் தொடர்ந்து பேசவேண்டும். உங்களுடைய தமிழ் வெறுப்பை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும்! நீங்கள் பேச பேசத்தான் எங்களுடைய வேலையும் ஈசியாகும்!" என விமர்சித்துள்ளார்.

மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டது. தமிழகத்திற்கான திட்டங்கள் நிராகரிக்கும் போது மட்டும் மத்திய அரசு கம்பி கட்டும் கதை சொல்கிறது. ஒவ்வொரு முறை பிரதமரை சந்திக்கும்போதும் புதிய ரெயில்பாதை திட்டங்கள் குறித்த கோரிக்கையை முன்வைப்பேன்.

தி.மு.க. அரசு எதைக்கேட்டாலும் தரக்கூடாது என மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்துவிட்டது. வரி வசூலிப்பதற்கு மட்டும் தமிழ்நாடு, நிதி ஒதுக்கும்போது பட்டை நாமம் போடுகிறது பா.ஜ.க. SIR மூலம் மக்களின் வாக்குரிமையை பறிக்க முயற்சிக்கிறார்கள். வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருப்பதை அனைவரும் உறுதி செய்து கொள்ளுங்கள் அதுதான் மிகவும் முக்கியம்" எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+