4 மூத்த வழக்கறிஞர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கும் முதல்வர் ஸ்டாலின்! சென்னையில் வெற்றி கொண்டாட்டம்
சென்னை: ஆளுநருக்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு வெற்றி தேடித் தந்த 4 மூத்த வழக்கறிஞர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேநீர் விருந்து அளிக்கிறார். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வாதாடிய முகுல் ரோஹத்கி, அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி, பி.வில்சன் ஆகியோருக்கு இன்று மாலை சென்னையில் தேநீர் விருந்து அளிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இன்று சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் 4 மூத்த வழக்கறிஞர்களுக்கு முதலமைச்சர் தேநீர் விருந்து அளிக்கிறார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், திமுகவின் முக்கிய பிரமுகர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் எனப் பலரும் பங்கேற்க உள்ளனர்.

ஆளுநருக்கு எதிரான வழக்கு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவிக்கும், ஆளும் திமுக அரசுக்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2 முறை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் உச்ச நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
"ஆளுநரிடம் செல்லும் மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றே பல்வேறு தீர்ப்புகள் கூறுகின்றன. ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. அரசியலமைப்பு சாசனம் 200-ஆவது பிரிவின் படி ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்கள் அனுப்பி வைக்கப்படும் போது ஆளுநருக்கு முன் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தலாம். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது. இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்படும் மசோதா மாறுபட்டிருந்தால் மட்டுமே ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க முடியும். 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று தீர்ப்பு அளித்தனர்.
குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறோம் என உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142ன் படி உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றது.
காரணம் இந்த 4 பேர் தான்
தமிழக அரசு சார்பில் இந்த வழக்கில் 4 மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். முகுல் ரோஹத்கி, அபிஷேக் சிங்வி, ராக்கேஷ் திவேதி, பி.வில்சன் ஆகியோர் சிறப்பாக வாதிட்டனர். அவர்கள் எடுத்து வைத்த சிறப்பான வாதங்கள், சட்ட நுணுக்கங்களின் அடிப்படையிலேயே இந்த வழக்கில் தமிழக அரசு வெற்றி பெற்றது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த நாளிலேயே முதல்வர் ஸ்டாலினுக்கும், வழக்கறிஞர் பி.வில்சனுக்கும் திமுகவினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
டீ பார்ட்டி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத் தந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது. சிறப்பாக வாதாடி தீர்ப்பை பெற்றுத் தந்த சீனியர் வழக்கறிஞர்களை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கௌரவிக்க இருக்கிறார்.
இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது. அந்த சட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
சென்னை கிண்டியில்
அதன் காரணமாக தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா, சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா, பெரியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா, அண்ணா பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா உட்பட 10 மசோதாக்கள் அமலுக்கு வந்தன.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பெறுவதற்காக வழக்காடிய உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, ராகேஷ் திவேதி, எம்.பி.க்கள் அபிஷேக் சிங்வி, பி.வில்சன் ஆகியோருக்கு பாராட்டுவிழா, சென்னை கிண்டியில் ஏப்.27 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications