முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த மக்கள் இயக்கம்! பிரபலங்களுக்கும் அழைப்பு! விவரம் என்ன?
சென்னை: பொதுமக்கள் மத்தியில் தூய்மையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புதிய மக்கள் இயக்கம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
''நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்'' என்ற அந்த அமைப்பின் மூலம் பிரபலங்களைக் கொண்டு மாதத்தின் இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் தமிழகமெங்கும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இது தொடர்பான மேலும் விவரம் வருமாறு;

மக்கள் இயக்கம்
நகராட்சி நிர்வாகத்துறையின் மானியக் கோரிக்கையில், சுத்தமான, பசுமையான சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் (Cleanliness drive) நடத்த "நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் (People's Movement for Clean Cities)" தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இரண்டாவது சனிக்கிழமை
இந்தத் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தேசிய சமுதாய நலப்பணி மற்றும் தேசிய பசுமை படையை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் இரண்டாவது சனிக்கிழமைகளில் மிகப்பெரிய அளவில் இத்தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும்.

பிரபலங்கள் பங்களிப்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரபலங்களைக் கொண்டு, மக்களுக்கு தூய்மையின் அவசியத்தை பற்றி வலியுறுத்தும் விதமாக பூங்காங்களில் கூட்டங்கள் நடத்திடவும், அவர்களை கொண்டு தூய்மை மற்றும் சுத்தம் தொடர்பான துண்டு பிரச்சாரங்கள் விநியோகிக்கவும், மஞ்சப்பையின் அவசியத்தை உணர்த்த மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மஞ்சப்பை
வணிகவரித்துறை வாயிலாக அனைத்து கடை உரிமையாளர்கள், வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இத்தூய்மைப் பணியில் முழுமையாக பங்கெடுக்க வலியுறுத்தவும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வாயிலாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகளை விளக்கி, மீண்டும் மஞ்சப்பை உபயோகப்படுத்தும் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் தலைமையில்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம் தங்கசாலை மேம்பாலப் பூங்கா அருகில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று "நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்" - தீவிரத் தூய்மைப் பணியினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் தலைமையில் மாணவ, மாணவியர்கள் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நகரங்களின் தூய்மை குறித்த உறுதிமொழியை ஏற்றனர்.












Click it and Unblock the Notifications