ரஜினி எப்படி இருக்கிறார்? நேரடியாக காவேரி மருத்துவமனை சென்று விசாரித்த முதல்வர்!
சென்னை: உடல்நலக் குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
கடந்த 28 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்திற்கு தலைச்சுற்றல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் திடீரென ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த ரசிகர்கள் என்னாச்சோ ஏதாச்சோ என தவித்தனர்.
பின்னர் அன்றிரவே செய்தியாளர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், இது வழக்கமாக அவர் மேற்கொள்ளும் உடல் பரிசோதனை. அதனால் யாரும் அச்சமடையத் தேவையில்லை என்றார்.

மருத்துவமனை
இதனால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இந்த நிலையில் ரஜினிக்கு அந்த மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் கழுத்து பகுதி வழியாக மூளை மற்றும் முகம், இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் செல்லாததால் அவருக்கு தலைச் சுற்றல் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

வெற்றிகரம்
இதையடுத்து அதை சரி செய்வதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது என்றும் அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஏற்கெனவே நடிகர் ரஜினிகாந்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள்
இந்த நிலையில் ரத்த ஓட்டத்தை சீராக்கும் சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரஜினிகாந்த் தொடர்ந்து சிறப்பு மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அதன்படி இன்று 4 ஆவது நாளாக சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வரும் ரஜினியின் உடல்நலம் பூரண குணமடைய அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என வாழ்த்தி வருகிறார்கள்.

ட்விட்டரில் வாழ்த்து
ரஜினிகாந்த் பூரண குணமடைய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினும் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் காவேரி மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தார். அங்கு 5 ஆவது தளத்தில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். மேலும் சிகிச்சை விவரங்களையும் முதல்வர் கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications