வேகம் எடுக்கும் சென்னை மெட்ரோ ரயில் பணி! சுரங்கம் தோண்டும் “காவிரி”.. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டப் பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். அடையாறு ஆற்றிற்கு 300 மீட்டர் கீழ் செல்லும் சவாலான வழித்தடப் பகுதிகள் மற்றும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெளிவரும் பணியினை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணியின் கீழ், கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான சுரங்க வழித்தடப் பகுதியில் கிரீன்வேஸ் மெட்ரோ நிலையம் முதல் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை சுரங்கப் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில், 300 மீட்டர் அடையாறு ஆற்றிற்கு கீழ் செல்லும் சவாலான வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தை கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெளிவரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் சேவை பெருமளவில் உதவி வருகிறது. தற்போது சென்னையில், முதல் கட்ட மெட்ரோ திட்டத்தில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் 3.1 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-II-இன் கட்டுமானப் பணிகள், 3 வழித்தடங்களில், 118.9 கி.மீ நீளத்தில் 128 ரயில் நிலையங்களுடன் 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, கட்டம்-11-இல் மொத்தம் 42.6 கி.மீ நீளத்திலான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வழித்தடம் 3-இல் மட்டும் 26.7 கி.மீ நீளத்தில் மாதவரம் கெல்லீஸ் மற்றும் கெல்லீஸ் -தரமணி ஆகிய இரண்டு பகுதிகளாக சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இரண்டாவது பகுதியான கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான சுரங்க வழித்தடப் பகுதியில் கிரீன்வேஸ் மெட்ரோ நிலையம் முதல் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை வருகிறது.
பல்வேறு விதமான மண் தன்மைகள், கடினமான பாறைகள், அதிநீரோட்ட பகுதிகள் மற்றும் நகர்புறத்திற்கென இடர்பாடுகள் ஆகிய சிக்கலான சவால்களை வெற்றிகரமாக சந்தித்து, "அடையாறு" என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஜூன் 2023-இல் சுரங்கம் தோண்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கிரீன்வேஸ் சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கி, அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையத்திற்கு அருகில், அடையாறு ஆற்றின் கீழ் சுமார் 40 முதல் 50 அடி ஆழத்தில் 300 மீட்டர் நீளத்திற்கு அடையாறு ஆற்றிற்கு கீழ் செல்லும் வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தை கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் வெளி வந்தது. செப்டம்பர் 2024-இல் காவேரி என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், டவுன்லைன் சுரங்கம் தோண்டும் பணியினை முடித்துள்ளது.
இந்த முக்கியமான பணியினை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, இந்தப் பணிகள் அனைத்தையும் உரிய காலத்தில் முடித்திட வேண்டும் என்று அலுவலர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications