வெளுத்து வாங்கிய ஸ்டாலின்! வியர்த்து விறுவிறுத்துப் போன திமுக மாவட்டச் செயலாளர்கள்! கச்சேரி இருக்கு
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் காட்டிய கோபம், அதில் கலந்து கொண்டவர்களை வியர்த்து விறுவிறுக்க வைத்துள்ளது.
காரணம் அந்தளவிற்கு ஸ்டாலினிடம் இருந்து கடுமையான வார்த்தைகள் எச்சரிக்கும் தொணியில் வெளிவந்தது தான்.
இதனை சற்றும் எதிர்பார்க்காமல் அங்கு அமர்ந்திருந்த பல மாவட்டச் செயலாளர்களுக்கும் ஏசி ஓடிக்கொண்டிருந்த சூழலிலும் வியர்த்துக் கொட்டியிருக்கிறது.
வழக்கம் போல் சம்பிரதாய கூட்டமாக இருக்கும் என நினைத்து வந்தவர்களுக்கு ஹைவோல்ட் ஷாக் கொடுத்து அனுப்பியிருக்கிறார் ஸ்டாலின். அதன் விவரம் வருமாறு;

தொண்டன் முக்கியம்
தொண்டர்களின் உழைப்பின் காரணமாகவே முதலமைச்சராக நான் இருக்கிறேன். பலரும் அமைச்சர்களாக ஆக்கப்பட்டுள்ளீர்கள் . சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆகியிருக்கிறீர்கள். மாவட்டக் கழகச் செயலாளர்களாக ஆகி இருக்கிறீர்கள். உள்ளாட்சித் தேர்தலின் மூலமாக பலரும் பொறுப்புகளுக்கு வந்துள்ளார்கள். நீங்கள் அனைவரும்தானே கழகத் தொண்டர்களைக் கவனிக்க வேண்டும். நீங்கள் தானே தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தாக வேண்டும்?

நானா? நீங்களா?
கடைக்கோடித் தொண்டனின் தேவையை அந்தப் பகுதியின் அமைச்சரோ - சட்டமன்ற உறுப்பினரோ தீர்க்க வேண்டுமா? அல்லது முதலமைச்சராக இருக்கிற நான் தீர்க்க வேண்டுமா? தொண்டன் உழைக்காமல் - நிர்வாகி வேலை பார்க்காமல் - யாரும் வெற்றி பெற்று வந்துவிடவில்லை. நாளைக்கே தேர்தல் வந்தால் - அதே தொண்டன் வீட்டுக்குத்தான் நீங்கள் போயாக வேண்டும். தொண்டர்கள் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

தொண்டர்கள் மகிழ்ச்சி
கழகத்தினரின் கோரிக்கைகளுக்கு உரிய முன்னுரிமை அளித்து அவற்றை நிறைவேற்றி, தேவையான உதவிகளைச் செய்து தந்திட வேண்டும் என்று கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்ற செய்தி தான் வர வேண்டும். அமைச்சர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் - பொறுப்பாளர்களும் முழுமையாக கவனம் செலுத்தி தொண்டர்களும், அவர்தம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிசெய்திட வேண்டும்.

தவறு செய்தவர்கள்
இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. அதில் முழுமையான வெற்றியை அடைய கவனத்தோடு செயல்பட வேண்டும். கட்சித் தேர்தலில் தகுதி வாய்ந்தவர்களை - தகுதி வாய்ந்த பொறுப்புகளுக்குக் கொண்டு வாருங்கள். உட்கட்சி தேர்தலில் சில இடங்களில் தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் செய்த தவறுகள், மாவட்டக் கழகச் செயலாளர்களின் தவறுகள் குறித்து முழுமையான அறிக்கை என்னுடைய கவனத்திற்கு வந்திருக்கிறது.

நடவடிக்கை உறுதி
தவறுகளைச் செய்தவர்கள் யார் யார் என்று எனக்குத் தெரியும். தவறு செய்தவர்களின் மனச்சாட்சிக்கும் தெரியும். தலைமைக் கழகத்தில் நிர்வாகிகளின் விசாரணைக்கு பிறகு நடவடிக்கைகள் நிச்சயமாக மேற்கொள்ளப்படும். இனி நடைபெறவிருக்கும் கழகத் தேர்தலை மிகக் கவனமாகவும், நேர்மையாகவும் நடத்திட வேண்டும் என்பதில் தலைமைக் கழக நிர்வாகிகளும் மாவட்டக் கழகச் செயலாளர்களும் உறுதியாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
