திமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகளால் 32.81 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் பேட்டி
சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
திமுக ஆட்சியில் ரூ.10.62 லட்சம் கோடியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. முதலீடுகள் மூலம் 32 லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. திமுக ஆட்சியில் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக பொருளாதாரம் 2030-ம் ஆண்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்காக கொண்டு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தொழில்துறை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதோடு நிற்காமல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் சென்று முதலீட்டாளர்கள் கூட்டத்தை நடத்தி, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்யும்படி தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
அந்த வகையில், இதுவரை 4 வெளிநாட்டு பயணங்களை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம், துபாய், ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றபோது ரூ.6.100 கோடி தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அதே ஆண்டில் சிங்கப்பூர், ஜப்பானில் ரூ.1,342 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
2024-ம் ஆண்டு தொடக்கத்தில் ஸ்பெயினில் ரூ.3,440 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். அதே ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் அமெரிக்காவில் ரூ.7,616 கோடி முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.
அதன் தொடர்ச்சியாக, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், திமுக நிர்வாகிகள் திரண்டு நின்று முதல்வர் ஸ்டாலினை வழியனுப்பி வைத்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், "தமிழ்நாட்டுக்கு பெரு முதலீடுகளை ஈர்க்க ஒரு வார கால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறேன். இந்தப் பயணத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் திட்டமிடப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை ரூ.10.62 லட்சம் கோடியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
இந்த முதலீடுகள் மூலம் 32 லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான ஒப்பந்தங்கள் முதலீடாக மாறி பணிகள் தொடங்கி விட்டன. இதற்கு மத்திய அரசு வெளியிடும் புள்ளி விவரங்களே சாட்சி. திமுக ஆட்சியில் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications