ரயிலில் கிளம்பிய முதல்வர் ஸ்டாலின்! இரவு துர்கா ஸ்டாலின் பிறந்த ஊரில் ‘ஸ்டே’! நாளை முக்கிய நிகழ்ச்சி
சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் ரயிலில் மயிலாடுதுறைக்கு கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின். எழும்பூர் ரயில் நிலையத்தில் ஸ்டாலினை பார்க்க ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். அதன்படி, இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 4.15 மணிக்கு திருச்செந்தூர் விரைவு ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுள்ளார்.

சென்னையில் இருந்து கிளம்பியுள்ள நிலையில் இன்று இரவு 8.15 மணிக்கு சீர்காழி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கார் மூலம் திருவெண்காட்டில் உள்ள துர்கா ஸ்டாலின் வீட்டிற்குச் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திருவெண்காட்டில் இன்று இரவு தனது மனைவி குடும்பத்தினருடன் தங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்.
இதனையடுத்து நாளை காலை 10 மணிக்கு கார் மூலம் மயிலாடுதுறை சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வை முடித்து விட்டு, மதியம் 1 மணியளவில் திருச்சியில் இருந்து சென்னை வரும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து மாலை 6.15 மணிக்கும் மீண்டும் சென்னை வந்தடைகிறார்.
இன்று ரயிலில் ஏறுவதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினை பார்க்க திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர். திமுக கொடி அசைத்தும், கைகளை அசைத்தும், வாழ்க வாழ்க என கோஷம் எழுப்பியும் முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோரை வழியனுப்பி வைத்தனர்.
அமைச்சர்கள், சென்னை மேயர் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் சென்னை எழும்பூரில் திரண்டனர். முதல்வர் ஸ்டாலினின் ரயில் பயணம் காரணமாக எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications