"இன்ச் பை இன்ச்" பார்க்கும் ஸ்டாலின்.. உதயநிதியுடன் வீடியோ கால்! ஒடிசா விபத்து களத்தில் அமைச்சர்கள்
சென்னை: ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு மீட்புப் பணிகளுக்காக சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வீடியோ கால் வாயிலாக முதலமைச்சர் முக ஸ்டாலின் கள நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்.

விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்திடவும் மேலும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த விபத்தில் காயமடைந்த மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் தேவையான உதவிகளை செய்திடவும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஒடிசா சென்றுள்ளனர்.
அவர்களுடன் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், மற்றும் ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக், ஆகியோர் கொண்ட குழுவும் இன்று காலை ஒடிசாவுக்கு விமானம் மூலம் சென்றடைந்தனர்.
அங்கிருந்து அமைச்சர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் விபத்து நடந்த பாலசோருக்கு அரசு ஹெலிகாப்டர் மூலம் விரைந்தனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் ஆகியோர் ஒடிசாவில் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்றனர்.

அமைச்சர்களை கொண்ட குழு விபத்து நடந்த இடத்தில் உள்ள நிலவரங்களையும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளையும் கண்காணித்தது. அதேபோல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள குழுவினர் விபத்து நடந்த இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விபரங்கள் குறித்து விபரம் சேகரித்து தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்தது.
இந்த குழு அளிக்கும் தகவலின் அடிப்படையில் தொடர் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விபத்து நடந்த இடத்தில் பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வீடியோ கால் மூலம் கள நிலவரத்தை எடுத்துரைத்து இருக்கிறார்.
தலைமைச் செயலகத்தில் ஒடிசா சென்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் அடங்கிய தமிழ்நாட்டு குழுவினருடன் வீடியோ கால் வாயிலாக மீட்புப் பணிகளின் நிலவரங்கள் குறித்தும், விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோர் வீடியோ கால் வாயிலாகவும், தலைமைச் செயலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications