அரசு ஊழியர்களுக்கு விரைவில் வருது நல்ல சேதி! அமைச்சர்கள் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!
சென்னை: ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் பற்றி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஜாக்டோ - ஜியோ என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அவ்வப்போது போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். ஜாக்டோ ஜியோ போராட்டம் பல சமயங்களில் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது பெரும்பாலான அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதில் கிடைக்கும் பலன்கள் பல புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை என்று அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதவிர ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 10 அம்ச கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போதைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அடுத்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பு கோரிக்கைகளை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் திமுக ஆட்சி மீது நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் எனக் கணக்கிடுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் முக்கிய அமைச்சர்கள் கொண்ட குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்து உத்தரவிட்டார். ஜாக்டோ- ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவும், அவர்களின் கோரிக்கைகள் பற்றி ஆலோசிக்கவும் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த அமைச்சர்கள் குழுவினர் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து வருகின்றனர். இன்று இந்தக் குழுவினர் ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய 4 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் உடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (பிப்.25) போராட்டம் நடத்த ஜாக்டோ - ஜியோ திட்டமிட்டிருந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஜாக்டோ - ஜியோ எந்தவிதமான போராட்டங்களையும் நடத்தக் கூடாது என இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications