வாகன சோதனையின்போது பலியான ஏட்டு குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - முதல்வர் ஸ்டாலின் ஆர்டர்!
சென்னை: தஞ்சாவூரில் வாகன தணிக்கையின்போது பைக் மோதி உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்த பழனிவேல், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது பைக் மோதி விபத்தில் பலியானார். விபத்தில் பலியான தலைமை காவலர் பழனிவேலுக்கு சத்தியா என்ற மனைவியும், பள்ளியில் படிக்கும் இரு மகன்களும் உள்ளனர். ஏட்டு பழனிவேல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் காவல் நிலைய தலைமைக் காவலர், பழனிவேல் (38) வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) மாலை, உதவி ஆய்வாளர் தலைமையில், குருங்களூர் வெண்ணாற்றுப் பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவர் மீது கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியுள்ளது.
இதில் காயமுற்று சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தலைமை காவலர் பழனிவேல். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இரவென்றும் பகலென்றும் பாராமல், தம் குடும்பத்தினரையும் மறந்து, நம் காவல்துறையினர் கடமையாற்றி வருகின்றனர். அந்தவகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த தலைமைக் காவலர் பழனிவேலின் அகால மரணம் காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒரு பேரிழப்பாகும்.
உயிரிழந்த தலைமைக் காவலர் பழனிவேலின் குடும்பத்தினருக்கும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு, ரூ.பாய் 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications