Actor Rajesh: ராஜேஷ் வீட்டில் ஸ்டாலின் படம்.. கருணாநிதி இல்லாமல் எந்த சுப காரியமுமே நடந்ததில்லையாம்!
சென்னை: மறைந்த நடிகர் ராஜேஷ், கருணாநிதி, ஸ்டாலின் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர். முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை தனது வீட்டின் ஹால் சுவற்றில் மாட்டி வைத்திருந்தார் ராஜேஷ். அவரது மறைவுக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ் சினிமாவில் சுமார் 50 ஆண்டு காலமாக நடித்து வந்தவர் நடிகர் ராஜேஷ். இவர் நடிப்பில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும் பல சின்னத்திரை தொடர்களும் வெளியாகியிருக்கின்றன. நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ்.

அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர், 'கன்னிப் பருவத்திலே' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். நடிகர் விஜய் சேதுபதியின் தர்மதுரை திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான படங்களிலும் நடித்திருந்தார் ராஜேஷ். தான் ஏற்று நடிக்கும் பாத்திரங்களில் தனது நடிப்பின் மூலம் முத்திரை பதித்தவர் ராஜேஷ்.
கருணாநிதி, ஸ்டாலின் மீது அபிமானம்
நடிகர் ராஜேஷ் கருணாநிதி, ஸ்டாலின் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர். ராஜேஷ் திருமணம் உட்பட அவரது இல்ல நிகழ்வுகள் பலவற்றில் கருணாநிதி நேரில் பங்கேற்று வாழ்த்தி உள்ளார். தனது வீட்டு ஹாலில் முதல்வர் ஸ்டாலின் படத்தை மாட்டி வைத்திருந்தார் நடிகர் ராஜேஷ்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் தலைவர் என புதிய பணியிடம் உருவாக்கப்பட்டு, திரைப்பட நடிகர் ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டிருந்தார். 2 ஆண்டு காலம் எம்ஜிஆர் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டின் தலைவராகப் பணியாற்றினார் ராஜேஷ்.
ராஜேஷ் முன்பு மேடையில் பேசுகையில், "அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர் சினிமா மூலம் தான் புகழ் பெற்றனர். புகழ் பெற்ற அனைத்து துறைகளிலும் திமுக தலைவர் கருணாநிதி சிறந்து விளங்கினார். அனைத்து தலைவர்களின் நற்குணங்களை உள்வாங்கி செயல்பட்ட ஒப்பற்ற தலைவரும் கருணாநிதிதான்" எனப் பேசி இருக்கிறார்.
ஸ்டாலின் இரங்கல்
இந்நிலையில் ராஜேஷ் மறைவுக்கு ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், "தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைத் தொடர்களில் நடித்ததோடு, பின்னணிக் குரல் கலைஞராகவும் முத்திரை பதித்தவர் ராஜேஷ்.
முத்தமிழறிஞர் கலைஞர் மீது அளவற்ற மரியாதையும். அன்பும் கொண்டு விளங்கினார். தலைவர் கலைஞம் அவர்களும், ராஜேஷ் அவர்களது திருமணம் முதலிய அவரது இல்ல நிகழ்ச்சிகளில் நவறாது கலந்துகொண்டு வாழ்த்துவது வழக்கம். கலைஞர் மறைவற்றபோது, "தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களிலும் அவர் ஓர் அங்கம்" என நெகிழ்ச்சியோடு பேசி தனது இரங்கலைத் தெரிவித்தவர் ராஜேஷ் என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.
திரைத்துறையில் அவரது நீண்ட அனுபவத்தைக் கருத்தில்கொண்டு, கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக அவரை நியமித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும். திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் ராஜேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் சென்னையில் வீட்டில் வைக்கப்பட்டுள்ள ராஜேஷின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications